ASER 2024: `தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்!' – ரவிக்குமார் எம்.பி கவலை

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி ரவிக்குமார் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், “இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கையை ப்ராதம் ( PRATHAM) அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேலும் சீரமைக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

தமிழ்நாட்டில் நேரடியாக ஆய்வு செய்ததில் 14.4 % அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லையென்றும், குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தும் 7.9 % பள்ளிகளில் அருந்துவதற்குக் குடிநீர் இல்லையென்றும், மொத்தத்தில் 77.7 % பள்ளிகளில் குடிநீர் இல்லையென்றும் ஏசர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2.6% அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லையென்றும், கழிப்பறை இருந்தும் அதைப் பயன்படுத்தப்பட முடியாத நிலை 16% அரசுப் பள்ளிகளில் உள்ளதென்றும், ஒட்டுமொத்தத்தில் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகள் 81.4% பள்ளிகளில் மட்டுமே உள்ளனவென்றும் கூறப்பட்டுள்ளது.

8% அரசுப் பள்ளிகளில் பெண்களுக்குத் தனியே கழிப்பறை இல்லையென்றும், தனி கழிப்பறைகள் இருந்த போதிலும் 3% பள்ளிகளில் அவை பூட்டப்பட்டு இருந்ததாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் 11.6% கழிப்பறைகள் இருந்ததாகவும் ஒட்டு மொத்தத்தில் 77.5% கழிப்பறைகள் மட்டுமே பெண்களுக்கு இருக்கின்றனவென்றும் ஏசர் அறிக்கைக் கூறுகிறது.

நூலக வசதி 13.3% அரசுப் பள்ளிகளில் இல்லையென்றும் நூலகம் இருந்தும் 22.4% பள்ளிகளில் நூலகத்தை மாணவர்கள் பயன்படுத்த முடியவில்லையென்றும், ஒட்டு மொத்தத்தில் 64.3% பள்ளிகளில் மட்டுமே மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய நிலையில் நூலகங்கள் இருக்கின்றனவென்றும் ஏசர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 2024 இல் வெளியான UDISE அறிக்கையில் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் ஏறக்குறைய 100% பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை, நூலக வசதிகள் உள்ளனவென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு மாறாக ஏசர் அறிக்கையின் விவரங்கள் உள்ளன.

UDISE அறிக்கை பள்ளி நிர்வாகத்தினர் தாமே போர்ட்டலில் பதிவு செய்யும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. ஆனால், ஏசர் அறிக்கையோ 534 பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஏசர் அறிக்கையின் விவரங்களே ஒப்பீட்டளவில் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும். இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஏசர் அறிக்கையில் கவலைதரும் இன்னொரு தகவலும் உள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 14 வயது வரையிலான மாணவர் சேர்க்கை 2022 ஆம் ஆண்டு 75.7% இருந்ததென்றும் அது 2024 ஆம் ஆண்டில் 68.7 % ஆகக் குறைந்திருக்கிறதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை உயர்ந்தது. ஆனால் அது இப்போது சரியத் தொடங்கியுள்ளது. கட்டமைப்பு வசதிகளும், போதிய ஆசிரியர்களும் இல்லாவிட்டால் ஏழைப் பெற்றோர்கூட தனியார் பள்ளிகளிலேயே தமது பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்கவேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.