Kudumbasthan:“பணம் இல்லாத உளவியல் நெருக்கடியை சந்திச்சிருக்கோம்; அதுதான் குடும்பஸ்தன்'' – பிரசன்னா

`குடும்பஸ்தன்’ திரைப்படத்திற்கு மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது.

இப்படத்தில் வேலை, பணமில்லாமல் திண்டாடும் நவீன் கதாபாத்திரத்தோடு பலரும் தங்களைப் பொறுத்திப்பார்க்க முடிவதாகச் சொல்கிறார்கள். அப்படி படத்தை அத்தனை யதார்த்தத்திற்கு நெருக்கமாக அமைத்திருக்கிறார்கள் திரைகதையாசிரியர்கள் பிரசன்னாவும், ராஜேஷ்வரும். இருவரும் `நக்கலைட்ஸ்’ குழுவின் முக்கிய உறுப்பினர்கள். இதில் பிரசன்னா திரைக்கதையாசிரியர் என்பதைத்தாண்டி நம்மை சிரிக்க வைக்கும் என்டர்டெயினரும்கூட! தன்னுடைய காமெடிகளாலும் அத்தனை ரகளைகளை `குடும்பஸ்தன்’ படத்தில் செய்திருந்தார் பிரசன்னா. படத்துக்கு வாழ்த்துகள் சொல்லி `குடும்பஸ்தன்’ தொடர்பாக பல விஷயங்களைப் பேசினோம்.

படத்துக்கு என்னென்ன விமர்சனங்கள் கிடைச்சிட்டு இருக்கு ?

படத்தைக் கொண்டாடுறாங்க. நாங்க `நக்கலைட்ஸ்’ல வீடியோ பண்ணும்போதே காமெடியை மக்கள் கொண்டாடாணும்னு ஒரு சிந்தனை எனக்கும் இயக்குநர் ராஜேஷுக்கும் இருந்தது.` யூ-டியூப் டு சினிமா’ பயணம் ஒரு பரிணாம வளர்ச்சிதான். இப்போ திரையரங்கத்துலயும் மக்கள் அனைவரும் சந்தோஷமாக படத்தைக் கொண்டாடணும்ங்கிறதுதான் எங்களுடைய எண்ணம். நாங்க நினைச்சதைவிடவும் மக்கள் இப்போ கொண்டாடுறாங்க!

Prasanna – Nakkalites

`குடும்பஸ்தன்’ படத்தோட உலகத்துல வெவ்வேறு வகையான மனிதர்கள் இருக்காங்க. ஒரு பக்கம் யதார்தத்திற்கு நெருக்கமான கதாபாத்திரம், மற்றொரு பக்கம் காமிக் வடிவிலான கதாபாத்திரம் எனப் பல மனிதர்கள் இருக்காங்க. இந்த உலகத்தை எப்படி உருவாக்குனீங்க?

நம்ம சமூகத்துல இருக்கிற மனிதர்கள் அப்படிதானே… பல வகையிலான மனிதர்கள் சேர்ந்து வாழ்கிற இடமாகதானே சமூகம் இருக்கு. அப்படிதான் இந்தக் கதையை நாங்க அமைச்சோம். பெருநிறுவனமயமாக்கல், உலகமயமாக்கலுக்குப் பிறகு குடும்பங்கள்ல ஏற்பட்டிருக்கிற மாற்றங்களைக் காட்சிப்படுத்தணும்னு மற்றொரு ஐடியா. முடிந்தளவுக்கு அதை நாங்க திரையில காட்டியிருக்கோம். நான் சொன்ன விஷயங்களெல்லாம் ஒவ்வொரு மனிதனை ஒவ்வொரு நிலைமைக்குத் தள்ளியிருக்கும். இதுல நம்ம ஸ்டேட்டஸ் மட்டுமேதான் வாழ்கைன்னு நினைக்கிற மக்களை உருவாக்கியிருக்கு. மற்றொரு பக்கம் ரெண்டு விஷயங்களுக்கு நடுவுல போராடுற நவீன் மாதிரியான ஒருத்தரையும் உருவாக்கியிருக்கு. இத்தனையும் யோசிச்சுதான் கதையை வடிவமைச்சோம். என்னோட வாழ்கிற சக மனிதர்களின் வாழ்கையிலிருந்து, அவர்களின் மனநிலையிலிருந்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தான் `குடும்பஸ்தன்’ல இருக்காங்க. இப்போ எல்லோரும் படத்துல என்னை பார்த்த மாதிரியே இருக்குனு சொல்றாங்க. ஆனால், அவங்களை பார்த்துதான் நாங்க கதாபாத்திரங்களை வடிவமைச்சிருக்கோம்.

இந்தக் கதையை எந்த வருஷத்துல நீங்க எழுதி முடிச்சீங்க ?

பொதுவாக நானும் இந்தப் படத்தோட இயக்குநர் ராஜேஷும் ஒரு யதார்த்தமான உரையாடல்லதான் கதை தொடர்பாகப் பேசுவோம். ஒரு திரைப்படத்துக்கு கதைப் பிடிக்கப்போறோம்னு ஃபார்மலாக உட்காரமாட்டோம். சும்மா ஒரு நாள் டீ குடிச்சிட்டு இருக்கும்போது பேசின லைன்தான் இந்தப் படத்தோட கதை. வேலை, பணம் இல்லாத ஒரு மனிதனை இந்த சமூகம் எப்படி நடத்துதுனுதான் இந்தப் படத்துல பேச விரும்பினோம். என்னுடைய அனுபவங்கள், இயக்குநரோட வாழ்வு அனுபவங்களைப் பேசும்போதுதான் இந்தக் கதை வந்தது. எங்க வாழ்க்கையில பணத்துக்காக நாங்க சில விஷயங்களை சந்திச்சிருக்கோம். பண்டிகை காலத்துல பணம் இல்லாமல் இருந்திருக்கோம். உறவினர்கள் வந்தால் சமாளிக்க முடியாமல் இருந்திருக்கோம். அது எப்படியான உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தும்னு எங்களுக்குத் தெரியும்ல… அது ஒரு திரைப்படத்துக்கான அட்டகாசமான ஒரு கதைக்கருவாக தெரிஞ்சது. இந்தக் கதையை படமாகப் பண்ணலாம்னு 2016லேயே முடிவு பண்ணிட்டோம். ஒரு நேரத்துல பல கதைகள்ல வேலை பார்ப்போம். அதுல ஒண்ணுதான் இந்த `குடும்பஸ்தன்’. முதல்ல இந்தப் படத்துல அசோக் செல்வன் நடிக்க வேண்டியது. ஆனால், அவர்கிட்ட அப்போ டேட் இல்ல. அவராகவேதான் இந்த கதைக்கு மணிகண்டனை சொன்னாரு. இன்னொரு பக்கம் தொடக்கத்துல இருந்தே மாமா கதாபாத்திரத்துக்கு குரு சோமசுந்தரம்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டோம்.

குடும்பஸ்தன் படத்தில்...
குடும்பஸ்தன் படத்தில்…

மணிகண்டனுக்கு கோவை வட்டார வழக்கு பெரிதளவுல பரிச்சயம் கிடையாது. எப்படி அவரை தயார்படுத்துனீங்க ?

இதுல முக்கியமான விஷயம் என்னனா… அவரை எங்ககூட வச்சுக்கிட்டே சுத்திட்டு இருந்தோம். அவர் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட்கிறதுனால இயல்பாகவே ஒரு விஷயத்தை ஆழமாக அவர் கவனிப்பாரு. அவர் கவனிக்கிறது எங்களுக்குத் தெரியவே தெரியாது. ஆனால், அனைத்து விஷயங்களை எடுத்துக்கிட்டு டவுட் கேட்பாரு. அதுனால அவருக்கு தனியாக கோச்சிங்லாம் கிடையாது. எங்ககூடவே எல்லா இடத்துக்கும் கூப்பிட்டு போயிடுவோம். கிராமப்புற பகுதிகள் மாதிரி நகர்புற பகுதிகள்ல கோவை வட்டார வழக்கு இருக்காது. அது கொஞ்சம் இப்போ ஷட்டில் ஆகிடுச்சு. அதுக்கேத்த மாதிரிதான் மணி தயாரானாரு.

குடும்பஸ்தன் படத்தில்…

உங்க டீம்ல இருந்து அடுத்தப் படம் எப்போ?

பேச்சுகள் நடந்துட்டு இருக்கு. கூடிய விரைவுல படத்தை தொடங்கிடுவோம். `குடும்பஸ்தன்’ படத்துக்காக வெளில படங்கள் எதுவும் நடிக்கல. இப்போ மறுபடியும் வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கு.

VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.