`பொன்னியின் செல்வன்’, `தசாவதாரம்’, `வேட்டையாடு விளையாடு’ போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரவி வர்மன்.
கடந்த 25 ஆண்டுகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற படங்களில் சிறப்பான பணிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல் இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களோடும் பணிபுரிந்திருக்கிறார் . இவர் சர்வதேச புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் அமைப்பான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தில் (ASC) உறுப்பினராக இணைந்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு இதில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். தற்போது ரவி வர்மனும் இதில் உறுப்பினராகிறார். இச்சங்கத்தில் உறுப்பினராக அங்கீகாரத்தைப் பெறும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.
அமெரிக்கர் அல்லாத ஒளிப்பதிவாளர் இந்த அங்கீகாரத்தை பெறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. பல ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர்கள் ஒன்று கூடி மற்ற ஒளிப்பதிவாளர்களின் வேலைகளைப் பார்த்து அவர்களின் தரத்தை மதிப்பீடு செய்த பிறகுதான் கூட்டமைப்பாக இந்த அங்கீகாரத்தை வழங்குவார்கள். தேசிய விருது மட்டுமல்லாமல் பல உயரிய பாராட்டுக்களைப் பெற்றுள்ள ரவி வர்மன், மிகப்பெரியதாக மதிக்கப்படும் ASC யின் உறுப்பினரானதற்கு திரை துறையினர் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த அங்கீகாரத்தை ஏற்றுக் கொண்ட ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், “அமெரிக்கா ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உலகெங்கும் உள்ள ஒளிப்பதிவாளர்கள் இந்த சங்கத்தில் இணைவதை ஒரு கனவாகக் கொண்டிருப்பார்கள். பல ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர்கள் உறுப்பினராக இருக்கும் இச்சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினரானது மகிழ்ச்சியை தருகிறது.” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…