இன்னும் இருக்கிறதுதானே இண்டியா கூட்டணி? – ஓர் அலசல்

2024 மக்களவைத் தேர்தலை ஒட்டி ‘இடி முழக்கம்’ போல் உருவானது இண்டியா கூட்டணி. ஆர்ப்பரிப்புடன் உருவான அக்கூட்டணி தேர்தல் முடிவுகள் மூலம் சிறு நம்பிக்கையையும் கடத்தியது. ஆனால், சமீபகால போக்குகள் ‘இண்டியா கூட்டணி இன்னும் இருக்கிறதுதானே?!’ என்ற கேள்வியை எழுப்புகிறது. அந்த சந்தேகத்தின் நிமித்தமாக ஒரு பார்வை…

நெருக்கடியால் உதயமானதா? – கடந்த மக்களவைத் தேர்தல் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்குமா? தொடர்ந்து 3-வது முறை பிரதமராகி மோடி வரலாறு படைப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் ஒருபுறம் இருந்தன. மறுபுறம், காங்கிரஸுக்கு தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. அதற்கு நிகரான ஒரு நெருக்கடி பல்வேறு மாநிலக் கட்சிகளுக்கும் உருவாகியிருந்தது. காரணம், மத்தியில் இருந்து கொண்டு தன் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு பாஜக கொடுத்துவந்த மறைமுக குடைச்சல்கள். ஐடி, அமலாக்கத் துறை ரெய்டுகள், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், மாநில அரசுகளுடன் ஆளுநர்கள் காட்டிய முரண் என பல்வேறு சிக்கல்களை மாநிலக் கட்சிகள் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மத்தியில் பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒருமித்த இலக்கு அத்தகைய மாநிலக் கட்சிகளுக்கு இருந்தது.

இதனால் 2024 மக்களவைத் தேர்தலை ஒட்டி நிதிஷ் குமார் முன்னெடுப்பில் ‘இடி முழக்கம்’ போல் உருவானது இண்டியா கூட்டணி. ஆர்ப்பரிப்புடன் உருவான அந்தக் கூட்டணி பிரச்சாரம் தொட்டே புது நம்பிக்கையை கடத்தியது. அதற்கு ஏற்றார் போல் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி ஆட்சி அமைத்தது. இதுவே இண்டியா கூட்டணியின் மெகா வெற்றியானது. அதனால், தேர்தலில் காங்கிரஸின் தனிப்பட்ட வெற்றி, வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சிகள், விமர்சனங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு பாஜகவுக்கு இண்டியா கூட்டணி சரியான ‘செக்’ என்று அரசியல் சதுரங்க களத்தில் சிலாகிக்கப்பட்டது. அதனை ஒட்டியே வாதவிவாதங்களும் நீண்டன.

அந்த ‘ஹனிமூன்’ காலம் முடிந்த பின்னர் சில விஷயங்கள் புரியத் தொடங்கின. ஒரு வளமான ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிக்கு ஒரு ‘செக்’ அவசியமானதுதான் என்று அரசியல் நிபுணர்கள் வார்த்தைகளால் வரிந்து எழுதப்பட்ட இண்டியா கூட்டணியின் வீரியம் நாளடைவில் குறையத் தொடங்கியது. பாஜகவை எதிர்க்கும் கூட்டணி என்றால் ஒரு நீடித்த நிலைத்த ஸ்திரத்தன்மையோடு இருந்திருக்க வேண்டும். அது அங்கே துளியும் இல்லை என்று வெளிப்படுத்தும் அளவுக்கு அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறின.

இன்னும் சொல்லப் போனால் இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்ட போதே அதன் தேவை தீர்ந்ததும் ‘பாஸ்’ (pause) பட்டன் போட்டு ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டதோ என ஐயம் எழும் அளவுக்கு அது ‘நோஸ் டைவ்’ அடித்துக் கொண்டிருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து தான் இப்போது, இண்டியா கூட்டணி இன்னும் இருக்கிறதுதானே என்ற அலசல்களை தேசிய அரசியலில் அவசியமாக்கியுள்ளது.

நிதிஷ் எஃபக்ட்… – இண்டியா கூட்டணி உருவாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் எவ்வளவு முக்கியப் பங்குவகித்தாரோ, அதே தாக்கத்தை அக்கூட்டணி வலுவிழப்பதிலும் அவர் ஏற்படுத்திச் சென்றார் என்றே சொல்ல வேண்டும். இண்டியா கூட்டணியிலிருந்து முதன்முதலில் வெளியேறியது நிதிஷ் தான். அவரைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் என ஒவ்வொருவராக போர்க்கொடி தூக்கினார்கள். மக்களவைத் தேர்தலில் கொல்கத்தாவில் இண்டியா கூட்டணிக்கு நோ சொன்னார் மம்தா, கேஜ்ரிவால் பஞ்சாபில் நோ சொன்னார் ஆனால் டெல்லியில் கூட்டணி வைத்தார்.

மக்களவைத் தேர்தலில் அப்படியென்றால் அடுத்தடுத்த சட்டப்பேரவைத் தேர்தல்கள் இன்னும் பல் இளித்தன. மக்களவைத் தேர்தலில் பாஜக என்ற ஒற்றை எதிரிக்கு ஒரு வேகத்தடை போட மட்டுமே இண்டியா கூட்டணியில் அத்தனை கட்சிகள் இணைந்தனவா என்பதுபோல் இப்போது நிலைமை மாறியிருக்கிறது. அதுவும் குறிப்பாக மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவு இண்டியா கூட்டணியை மேலும் வலுவிழக்கச் செய்துள்ளது.

NDA vs INDIA Bloc: இலக்கோடு திரண்ட அணி ஏன் இப்படியானது? தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாஜக தான் நங்கூரம். அதன் சக்தியால் தான் அனைத்துக் கட்சிகளும் அங்கே ஈர்க்கப்பட்டு, இணைக்கப்பட்டு இருக்கின்றன. அந்தக் கூட்டணிக்கு தெளிவான இலக்குகளை பாஜக வகுக்கிறது. அதை சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் கூட முரண்டு பிடிக்காமல் கேட்டுக் கொள்கின்றனர்.

ஆனால், இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்படியல்ல. அந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை வகிப்பது போல் தோன்றினாலும் கூட அந்தத் தலைமையை ஏற்க, பணிய மம்தா பானர்ஜி போன்றோர் ஆரம்பத்திலிருந்தே தயாராக இல்லை. இண்டியா கூட்டணி என்ற பெயரையே மம்தா தான் முன்மொழிந்தார் என்று சொல்லப்படும் சூழலில் அதற்குக் கூட தேசியக் கட்சியான காங்கிரஸ் அங்கீகாரம் கொடுத்துவிடவில்லை. இண்டியா கூட்டணிக்கு நங்கூரம் என்று யாரும் இல்லை என்பது அறிந்தே தான் அந்தக் கட்சிகள் ஒன்றிணைந்தன. இதனாலேயே தான் மக்களவைத் தேர்தலுக்காக அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட கூட்டணி என்ற விமர்சனங்கள் இன்று பொருந்திப் போகின்றன.

இந்த இடத்தில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவின் அண்மைக் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. “இண்டியா கூட்டணி, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தால் அதனை இழுத்து மூடிவிடலாம். இல்லாவிட்டால் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் உறுப்புக் கட்சியினர் அனைவரும் ஒன்றுகூடி ‘ஒருமித்த பொறுப்புகள்’ குறித்து ஆலோசித்து செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.” என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த ஒருமித்த பொறுப்பு அதை வலுப்படுத்த ஒன்றிணைக்கும் சித்தாந்தம் இல்லை என்பதையே இந்தக் கூட்டணியின் பிரதான பலவீனமாகக் கருதலாம்.

பிராந்திய அரசியல் வேறு; தேசிய களம் வேறு! – ஆனால், இப்படி ஆரவாரத்தோடு தொடங்கி கிடப்பில் போடலமா? இது பலமா, பலவீனமா என்று கேட்டால், காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் வேறு விதமான விளக்கத்தை நல்குகின்றனர்.

“இண்டியா கூட்டணி மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டும் என்ற பிரதான இலக்கோடுதான் உருவானது. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் டெல்லியிலோ அல்லது வேறு மாநிலத்திலோ மக்கள் பிரச்சினைகள் அந்தந்த பிராந்தியம் சார்ந்து இருக்கும். அங்கே ஒருவொருக்கொருவர் எதிர்ப்பதில் தவறேதும் இருக்க முடியாது. இப்போதும் கூட தேசிய அளவிலான பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஓரணியில் தானே திரள்கிறார்கள்.

கேரளாவில் இடது சாரிகள் – காங்கிரஸ் எதிரெதிர் கட்சிகள். ஆனால் நாடாளுமன்றத்தில் முக்கியப் பிரச்சினைகளுக்கு கூட்டாகக் குரல் கொடுப்பதில்லையா? மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் – திரிணமூல் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால் அவர்களும் நாடாளுமன்றத்தில் ஒன்றுபட்டு நிற்பதில்லையா? அதனால் இண்டியா கூட்டணி நீர்த்துப் போய்விட்டதாகக் கூற முடியாது. அதுபன்முகத் தன்மையோடு செயல்படுகிறது. மாநில அரசியல் வேறு தேசிய அரசியல் வேறு என்பதை உணர்ந்து செயல்படுகிறது என்றே புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறுகின்றனர்.

இன்னும் பிஹார் தேர்தல் வேறு இருக்கிறது! – எத்தனை சமாதானங்கள் சொன்னாலும் டெல்லி தேர்தல் களத்தில் ஆம் ஆத்மியும் – காங்கிரஸும் ஒருவர் மீது ஒருவர் முன்வைக்கும் விமர்சனங்கள் ‘இனி முகத்தில் முழிக்க முடியுமா?’ என்று குடும்பங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் ரகமாக இருக்கிறது. காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்குப் பின்னர் உமர் அப்துல்லாவும், அவரது தந்தையும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா முன்வைக்கும் கருத்துகளும் பாஜக பக்கம் சாய்கின்றனரோ என்ற சந்தேகத்தை எழுப்புவது போல் உள்ளது.

இந்த நிலையில் இன்னும் பிஹார் தேர்தல் மீதமிருக்கிறது. பிஹாரில் காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இண்டியா கூட்டணிக்கு மம்தா பானர்ஜி தலைமை தாங்க வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் அண்மையில் கூறிய கருத்து இந்த சலசலப்பை இன்னும் வலுவடையச் செய்துள்ளது.

“பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் அந்த மாநில அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆர்ஜேடி, ஜேடியு, பாஜக, காங்கிரஸ் மட்டுமல்லாது தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுவாரஜ்ய கட்சியும் களம் காணவிருக்கிறது. இவர்கள் ஒவ்வொருவருக்குமே இது மிக முக்கியமான தேர்தல். இந்த நிலையில் இண்டியா கூட்டணிக்கான இலக்குகளைக் கொண்டு இந்தத் தேர்தலை சந்திப்பது என்பது சாத்தியமானது இல்லை என்பது ஒருபுறம் இருக்க அது பொருத்தமற்றதும் கூட” எனக் கூறுகின்றனர் இண்டியா கூட்டணி ஆதரவாளர்கள். ஆனால் மேற்குவங்கம், மகாராஷ்டிரா, ஹரியானா, கேரளா, டெல்லி, காஷ்மீர் எனப் பல மாநிலங்களில் சிதைந்து கிடக்கும் உறவால் இண்டியா கூட்டணி இனியும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

இந்த ஆண்டு பிஹார் என்றால் 2026-ல் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் என நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதனால் இந்த ஆண்டு இறுதியிலிருந்து இண்டியா கூட்டணியில் உள்ள மாநிலக் கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான உறவில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது கூடுதல் கவனம் பெறும். அதுவும் குறிப்பாக தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியின் நிலவரம் தனிச் சிறப்பான கவனம் பெறும்.

காங்கிரஸ், ராகுல் வளர்ச்சிக்காவா?! – மாநிலம்தோறும் இண்டியா கூட்டணிக்குள் முட்டல்கள் மோதல்கள் ஏற்பட்டிருக்க, இதற்கு முக்கியக் காரணம் பொதுவான எதிரி இருந்தாலும் பொதுவான சித்தாந்தம் இல்லாதது என்பதை சுட்டிக்காட்டலாம். அதேபோல், மாநிலக் கட்சிகள் எல்லாம் ஓரணியின் கீழ் வருவதால் அது காங்கிரஸ் எனும் தேசியக் கட்சிக்கு தங்களின் பலத்தை மடைமாற்றம் செய்துள்ளது என்பதை மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அந்தக் கட்சிகள் புரிந்து கொண்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டலாம்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி உருவாகியுள்ளார். இதுவும் இண்டியா கூட்டணியின் மாநிலக் கட்சிகளுக்கு ஒருவித ஏக்கத்தை உருவாக்கியிருக்கலாம். பாஜகவை எதிர்க்க தாங்கள் செலுத்திய அத்தனை உழைப்பும் ராகுல் காந்தியை பலப்படுத்த அவரது பிம்பத்தை இன்னும் கட்டமைக்கவே அதிகமாக உதவியுள்ளது என்பதை மாநிலக் கட்சிகள் தங்களுக்குள் விவாதித்திருக்கலாம்.

இப்படியான சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றையும் மீறி காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சொல்வதுபோல் இலக்கு என்ன, சித்தாந்தம் என்ன என்று இண்டியா கூட்டணிக் கட்சிகள் கூடி ஆலோசித்து அதை உயிர்ப்புடன், வலுவாக வைத்திருக்க ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தையாவது வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் இந்தக் கூட்டணி ப்ளாஸ்டர்களை மறைத்துக் கொண்டு ‘பாஜகவை அப்புறப்படுத்துவோம்’ என்று கூறினால் அது கர்ஜனையாக இல்லாமல் கொக்கரிப்பாக மட்டுமே பார்க்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.