‘உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்’ – நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை

புதுடெல்லி: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல், வக்பு திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதை நோக்கி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கிவைக்கும் நோக்கில், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அப்போது அவர், “’அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி’ இதுவே எனது அரசின் மந்திரம். இரண்டு மாதங்களுக்கு முன்பு, நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட 75 ஆண்டுகளைக் கொண்டாடினோம். சில நாட்களுக்கு முன்பு, 75 ஆண்டு பயணத்தை நிறைவு செய்தோம். அனைத்து இந்தியர்களின் சார்பாகவும், பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு நிர்ணயக் குழுவில் இருந்த அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இது நமது கலாச்சார மரபுகள் மற்றும் சமூக விழிப்புணர்வின் திருவிழா. இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் புனித நீராடியுள்ளனர். மவுனி அமாவாசை அன்று நடந்த விபத்துக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

சில தினங்களுக்கு முன்பு நாம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இழந்துவிட்டோம். நாட்டின் பிரதமராக 10 ஆண்டு காலம் பணியாற்றியவர் அவர். நாடாளுமன்ற உறுப்பினராக மிக நீண்ட காலம் இருந்தவர். அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

மிகப் பெரிய முடிவுகள் மிகவும் வேகமாக எடுக்கப்பட்டு வருவதை இன்று நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள் ஆகியோருக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்குவதற்கான உறுதியான நடவடிக்கையை எனது அரசு எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகளைக் கட்ட எனது அரசு முடிவெடுத்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு எனும் கனவை நனவாக்குவதில் எனது அரசு உறுதிபூண்டுள்ளது.

எனது அரசாங்கம் பழங்குடி சமூகத்தின் ஐந்து கோடி மக்களுக்காக ‘தார்தி ஆபா பழங்குடி கிராம மேம்பாட்டு திட்டத்தை’ தொடங்கியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான சட்டம், வக்பு திருத்த சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவதை நோக்கி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனது அரசாங்கம் இளைஞர்களின் கல்வி மற்றும் அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆறு கோடி மூத்த குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற எனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் எனது அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. 3 கோடி லட்சாதிபதி பெண்களைக் கொண்டிருக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இன்று அதிக எண்ணிக்கையிலான பெண்கள் போர் விமானங்களை ஓட்டுவது, காவல்துறையில் சேருவது மற்றும் நாட்டில் உள்ள நிறுவனங்களை வழிநடத்துவது என நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். நமது மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டை பெருமைப்படுத்துகிறார்கள்.

இன்று நமது இளைஞர்கள் ஸ்டார்ட்அப்கள் முதல் விளையாட்டு, விண்வெளி வரை அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு பெருமை தேடித் தருகிறார்கள். செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுகிறது. உலகின் கண்டுபிடிப்பு சக்தியாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் நோக்கம். செயற்கை நுண்ணறிவுத் துறையில், இந்திய AI மிஷன் தொடங்கப்பட்டுள்ளது. MSME-களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் மற்றும் மின் வணிக ஏற்றுமதி மையங்கள் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் வணிகத்தை ஊக்குவித்து வருகின்றன.

இன்று, டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கிய உலகளாவிய வீரராக இந்தியா தனது இருப்பை உணர வைக்கிறது. உலகின் வளர்ந்த நாடுகளும் இந்தியாவின் UPI பரிவர்த்தனை முறையின் வெற்றியால் ஈர்க்கப்பட்டுள்ளன. எனது அரசாங்கம் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான ஒரு கருவியாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. சைபர் பாதுகாப்பு செயல்திறனை உறுதி செய்வதில் எனது அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் மோசடி, சைபர் குற்றம் மற்றும் டீப்ஃபேக் ஆகியவை சமூக, நிதி மற்றும் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான சவால்களாக உள்ளன.

உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டம் நிறைவடைந்துள்ளது. இப்போது நாடு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை மூலம் இணைக்கப்படும். விமான நிறுவனங்கள் 1700 புதிய விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்குவதன் மூலம் நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் மெட்ரோ ரயில் நெட்வொர்க் இப்போது 1000 கிலோமீட்டர் மைல்கல்லைக் கடந்துவிட்டது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக, நாட்டில் 1.75 லட்சம் ‘ஆரோக்கிய கோயில்கள்’ நிறுவப்பட்டுள்ளன. புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பல புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்க வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கின் எட்டு மாநிலங்களின் திறனை முழு நாடும் காண உதவும் வகையில், முதல் அஷ்டலட்சுமி மஹோத்சவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு பல வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாதுகாப்புத் துறையில் தன்னம்பிக்கையுடன் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் என்பதில் இருந்து, உலகுக்காக தயாரிப்போம் என்பதை நோக்கி நாம் நகர்ந்துள்ளோம். வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதுதான் நமது ஒரே ஒரு குறிக்கோள். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்” என்று தெரிவித்தார்.

சாரட் வண்டியில் பயணம்.. முன்னதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து சாரட் வண்டியில் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். அவரை குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இன்று தொடங்கியுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 13-ம்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 10-ல் தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதியுடன் நிறைவடையும். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்.1) தாக்கல் செய்ய உள்ளார். இதன்மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் பிப்ரவரி 3, 4, 5-ம் தேதிகளில் நடைபெறும். இந்த கூட்டத்தொடரில், நிதி மசோதா 2025, வக்பு மசோதா, வங்கி ஒழுங்கு முறை சட்ட திருத்த மசோதா, இந்தியன் ரயில்வே மற்றும் இந்தியன் ரயில்வே வாரிய சட்ட ஒருங்கிணைப்பு மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.

விமான போக்குவரத்து துறை தொடர்பான நிதி நலன்களை பாதுகாக்கும் மசோதாக்கள், குடியேற்றம், வெளிநாட்டினர் நுழைவு தொடர்பான தற்போதைய விதிமுறைகளை மாற்றும் மசோதாக்கள், கோவா மாநில சட்டப்பேரவை தொகுதிகளில் பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான மசோதா ஆகியவையும் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள குழப்பமான வரி முறைகளை எளிமைப்படுத்தும் விதமாக வருமான வரி தொடர்பான புதிய நேரடிவரி சட்ட (Direct Tax Code) மசோதாவும் அறிமுகமாகும் என தெரிகிறது.

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: மாத சம்பளதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு இந்த பட்ஜெட்டில் ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படலாம். புதிதாக 2 வரிப் பிரிவுகள் சேர்க்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டில் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடும் வகையில் மூலதன செலவினத்துக்கான ஒதுக்கீட்டை 20 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மக்களின் செலவிடும் வருவாய் அதிகரிக்கும் என்பதுடன், அது பொருளாதார சுழற்சிக்கு வித்திடும் என்பது அரசின் மதிப்பீடாக உள்ளது. 2026 மார்ச் இறுதிக்குள் நிதி பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக கட்டுக்குள் வைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படலாம் என்று யர்னஸ்ட் யங் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.