புதிய கரன்சியை உருவாக்க முயன்றால்… பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

வாஷிங்டன்:

சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்குப் பதிலாக பிரிக்ஸ் நாடுகள் புதிய கரன்சியை உருவாக்க முயற்சித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து வெற்றி பெற்றபின் இதுபற்றி கருத்து தெரிவித்த டிரம்ப், வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு கரன்சியை உருவாக்க முயற்சி செய்தால், அவர்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதிபராக பதவியேற்ற பின் மீண்டும் பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோசியலில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

நாம் ஒதுங்கி நின்ற வேளையில், பிரிக்ஸ் நாடுகள் டாலரிலிருந்து விலகிச் செல்ல முயற்சிப்பது தொடர்பான யோசனை முடிந்துவிட்டது. இனி அந்த நாடுகள் ஒரு புதிய பிரிக்ஸ் (BRICS) கரன்சியை உருவாக்கவோ அல்லது வலிமையான அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை ஆதரிக்கவோ மாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும். அல்லது, அவர்கள் அற்புதமான அமெரிக்கப் பொருளாதாரத்தில் விற்பனை செய்வதிலிருந்து விடைபெறும் நிலை ஏற்படும்.

அவர்கள் இன்னொரு மோசமான நாட்டை தேடிச் செல்லலாம். சர்வதேச வர்த்தகத்திலோ அல்லது வேறு எங்கும் பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை. அப்படி முயற்சிக்கும் நாடு எதுவாக இருந்தாலும் அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்கு விடை கொடுக்கவேண்டும்.

இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.