4-வது டி20: ஹர்திக், துபே அதிரடி.. இங்கிலாந்துக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா

புனே,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புனேயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சி காத்திருந்தது. 2-வது ஓவரை வீசிய சாகிப் மக்மூத் அந்த ஓவரில் சாம்சன் (1 ரன்), திலக் வர்மா (0) மற்றும் சூர்யகுமார் யாதவ் (0) ஆகியோரை காலி செய்தார். இந்த இக்கட்டான சூழலில் இருந்து இந்திய அணியை அபிஷேக் சர்மா – ரிங்கு சிங் மீட்டெடுத்தனர். அபிஷேக் சர்மா 29 ரன்களிலும், ரிங்கு சிங் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் கை கோர்த்த ஆல் ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா – ஷிவம் துபே அதிரடியாக விளையாடி இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர். இருவரும் இணைந்து 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா 53 ரன்களில் (30 பந்துகள்) ஆட்டமிழந்தார். ஷிவம் துபேவும் அரைசதத்தை கடந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் அடித்துள்ளது. ஷிவம் துபே 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் சாகீப் மக்மூத் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்க உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.