IND vs ENG | இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மிகப்பெரிய மாற்றம்..! சஞ்சு இடம் தப்புமா?

India playing XI | இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி இன்று புனேவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மிகப்பெரிய இரண்டு மாற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த தொடரில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து சொதப்பி வரும் சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படுமா? அல்லது அவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த ரிங்கு சிங் முழு உடல் தகுதியை எட்டிவிட்டார். அவரும் இந்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது. அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சஞ்சு சாம்சன் விளையாடுவாரா?

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் இந்த டி20 தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் சொதப்பி வருகிறார். அவர் சீராக விளையாடாமல் இருப்பது பிளேயிங் லெவனில் அவருக்கான இடத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார். குறிப்பாக ஜோப்ரா ஆர்சர் பந்துவீச்சில் இரண்டு முறை ஆட்டமிழந்துள்ளார். 145 கி.மீ வேகத்தில் வரும் பந்துகளை எதிர்கொள்ள சிரமப்படுகிறார். அதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? அல்லது வெளியே உட்கார வைக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காத்திருக்கும் ரிஷப் பந்த் 

சஞ்சு சாம்சன் கடும் போராட்டத்துக்குப் பிறகே இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் மற்றும் ஜெய்ஷ்வால், சுப்மன் கில் ஆகியோர் டி20 அணிக்குள் மீண்டும் வர தயாராக உள்ளனர். இருப்பினும் கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுப்பதை முன்னுரிமையாக வைத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக சொதப்புவது ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடிவிட்டால் அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தனக்கான இடத்தை உறுதி செய்வார். இல்லை என்றால் அடுத்த தொடரில் அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினமே. 

ரிங்கு சிங் ரெடி

அதேபோல் பார்மில் இல்லாத ரிங்கு சிங் காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடவில்லை. அவரும் இப்போது முழு உடல் தகுதியை எட்டிவிட்டார். ஆனால் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்பது தான் கேள்வியே. அப்படி அவர் அணிக்குள் கொண்டு வந்தால் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியின் பிளேயிங் லெவனை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.