மும்பை,
இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சஹா (வயது 40) அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் கடந்த நவம்பர் மாதம் ஓய்வை அறிவித்தார். இவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மகேந்திர சிங் தோனியின் ஓய்வுக்குப்பின் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அணியில் நிலையான இடம்பிடித்தார்.
இருப்பினும் கேஎல் ராகுலின் வருகை மற்றும் மோசமான பார்ம் காரணமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். இவர் கடைசியாக 2021-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்தார். அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி சீசனோடு அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் (ஐ.பி.எல். உள்பட) ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இவர் ரஞ்சி தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வந்தார். இன்று முடிந்த பெங்கால் – பஞ்சாப் இடையேயான ஆட்டத்தோடு கிரிக்கெட்டிலிருந்து சஹா விடை பெற்றுள்ளார். தனது கடைசி போட்டியில் விளையாடிய அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். முன்னதாக களமிறங்கிய அவருக்கு இரு அணி வீரர்களும் வரிசையாக நின்று மரியாதை செலுத்தி கவுரவித்தனர்.