சேமிப்பு, முதலீடு, நுகர்வு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: நாட்டு மக்களின் சேமிப்பு, முதலீடு, நுகர்வு, வளர்ச்சி ஆகியவற்றை விரைவாக அதிகரிக்க மிகவும் வலுவான அடித்தளத்தை அமைக்கக்கூடிய பட்ஜெட் இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்த தனது கருத்தை பிரதமர் நரேந்திர மோடி வீடியாவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இது 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களின் பட்ஜெட். இது ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் நிறைவேற்றும் பட்ஜெட். இளைஞர்களுக்காக நாங்கள் பல துறைகளைத் திறந்துள்ளோம். வளர்ச்சி அடைந்த இந்தியாவின் நோக்கத்தை சாதாரண குடிமகன் முன்னெடுத்துச் செல்லப் போகிறார்.

இந்த பட்ஜெட் பலத்தைப் பெருக்கும். இந்த பட்ஜெட் சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் வளர்ச்சியை விரைவாக அதிகரிக்கும். இந்த மக்கள் பட்ஜெட்டுக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது முழு குழுவினரை நான் வாழ்த்துகிறேன். பொதுவாக பட்ஜெட்டின் கவனம் அரசாங்கத்தின் கருவூலம் எவ்வாறு நிரப்பப்படும் என்பதில்தான் இருக்கும். ஆனால், இந்த பட்ஜெட் அதற்கு நேர்மாறானது.

குடிமக்களின் பைகளை நிரப்பவும், சேமிப்பை அதிகரிக்கச் செய்யவும், நாட்டின் வளர்ச்சிக்கு குடிமக்கள் பங்களிப்பவர்களாக மாறவும் இந்த பட்ஜெட் மிகவும் வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, இந்த பட்ஜெட்டில் பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அணுசக்தியில் தனியார் துறையை ஊக்குவிப்பது வரலாற்று சிறப்புமிக்கது. இது நாட்டின் வளர்ச்சியில் சிவில் அணுசக்தியின் பெரிய பங்களிப்பை உறுதி செய்யும்.

பட்ஜெட்டில், வேலைவாய்ப்புக்கான அனைத்து துறைகளுக்கும் எல்லா வகையிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் சீர்திருத்தங்களைப் பற்றி நான் விவாதிக்க விரும்புகிறேன். உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவதன் மூலம், இந்தியாவில் பெரிய கப்பல்கள் கட்டுவது ஊக்குவிக்கப்படும், தற்சார்பு இந்தியா இயக்கம் வேகம் பெறும்.

கப்பல் கட்டுவது அதிகபட்ச வேலைவாய்ப்பை வழங்கும் துறை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேபோல், நாட்டில் சுற்றுலாவிற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 50 முக்கியமான சுற்றுலா நிலையங்களில் ஹோட்டல்கள் கட்டப்படும். முதல் முறையாக, ஹோட்டல்களை உள்கட்டமைப்பு வரம்பின் கீழ் கொண்டு வருவதன் மூலம், சுற்றுலாவுக்கு பெரிய ஊக்கம் கிடைக்கும். இது மிகப் பெரிய வேலைவாய்ப்புத் துறையான விருந்தோம்பல் துறைக்கு ஆற்றலை வழங்கும்.

இந்த பட்ஜெட்டில் ஒரு கோடி கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பதற்காக ‘ஞான பாரத் மிஷன்’ தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அறிவு மரபால் ஈர்க்கப்பட்ட ஒரு தேசிய டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்கப்படும். அதாவது, தொழில்நுட்பம் அதன் முழு அளவிற்குப் பயன்படுத்தப்படும். பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள், விவசாயத் துறையிலும் கிராமப்புற பொருளாதாரத்திலும் ஒரு புதிய புரட்சிக்கு அடிப்படையாக மாறும். ‘விவசாயிகளுக்கான கடன்’ வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதால், இது அவர்களுக்கு மேலும் உதவும்.

இந்த பட்ஜெட்டில், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வருமானப் பிரிவினருக்கும், வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இது நமது நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிதும் பயனளிக்கும். சமீபத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். புதிய தொழில்முனைவோராக மாற விரும்பும் நாட்டின் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு உத்தரவாதம் இல்லாமல் ரூ. 2 கோடி வரை கடன் வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.