அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சில சம்பவங்களை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு பூதாகரமாக்குவதாகவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக ஆளுநர் அனைத்து பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அது எங்களுக்கு நன்றாகதான் உள்ளது. தொடர்ந்து அதை செய்ய வேண்டும். ஏன் என்றால், அதை செய்ய செய்யத்தான் எங்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் வேகம் வருகிறது. அவருடைய போக்கு இந்த ஆட்சிக்கு சிறப்பைதான் சேர்க்கிறது. எனவே, அவர் அதை தொடர்ந்து செய்யட்டும், தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நான் ஆளுநரை கேட்டுக்கொள்கிறேன்.
காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழுவை ஆளுநர் ரத்து செய்துள்ளது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். வரும் 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு வருகிறது. அப்போது தெரியும்.
பெரியாரை மரியாதை குறைவாக பேசக்கூடியவர்களுக்கெல்லாம் நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. ஏன் என்றால், பெரியார்தான் எங்களுக்குத் தலைவர். எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் அவர்தான். அதனால், அதை நாங்கள் பெரிதுப்படுத்தவும் பொருட்படுத்தவும் தயாராக இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து கேட்கிறீர்கள். பிப். 5-ம் தேதி தேர்தல், 8-ம் தேதி முடிவு வெளியாகும். அப்போது தெரியும்.
மத்திய அரசின் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பை பொருத்தவரை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் தீர்மானம் போட்டு இருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்த சொல்லியிருக்கிறோம். பார்ப்போம். நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பிறகு தான் என்ன என்பது தெரியும்.
சட்டம் ஒழுங்கு குறித்து வேண்டுமென்றே திட்டமிட்டு அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சில சம்பவங்களை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்குகிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களைப் பொறுத்தவரை சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதனால்தான் வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிற்சாலைகள் எல்லாம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.