நாசா விண்வெளி திட்டத்தில் சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா

நாசாவின் விண்வெளி திட்டத்தில் சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரராக, விமானப்படை பைலட் குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்சு சுக்லா(40). இந்திய விமானப்படையில் கடந்த 1985-ம் ஆண்டு பைலட்டாக சேர்ந்தார். ஏன்-32, டார்னியர், ஹாக், ஜாக்குவார், மிக்-21, மிக்-29 மற்றும் சுகோய் போர் விமானங்களில் 2000 மணி நேரத்துக்கு மேல் பறந்துள்ளார்.

இவரை விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக இஸ்ரோ தேர்வு செய்தது. இதையடுத்து இவர் ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்துக்கு பயிற்சிக்காக கடந்த 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஆக்சியோம் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்(ஐஎஸ்எஸ்)க்கு இந்த ஆண்டு அனுப்புகிறது. இந்த விண்கலத்தின் கமாண்டராக நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெகி விட்சன் செல்கிறார். இவருடன் செல்ல இஸ்ரோ விண்வளி வீரர் குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வாகியுள்ளார். இவர்களுடன் போலந்தை சேர்ந்த வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி -விஸ்நியூஸ்கி மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த வீரர் டிபோர் காபு ஆகியோர் செல்கின்றனர்.

சர்வதேச விண்வெளி மையத்துக்கு இஸ்ரோ சார்பில் விண்வெளி வீரர் சென்று தங்குவது இதுவே முதல் முறை. போலந்து மற்றும் ஹங்கேரி வீரர்களும் முதல் முறையாக சர்வதேச விண்வெளி மையம் சென்று தங்கி ஆய்வு பணியில் ஈடுபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 14 நாள் விண்வெளி பயணத்துக்குப்பின்பு இவர்கள் பூமி திரும்புவர்.

இது குறித்து சுபான்சு சுக்லா கூறுகையில், ‘‘ சர்வதேச விண்வெளி மையத்தில் நான் பெறும் அனுபவத்தை இந்திய மக்களுடன் பகிர்ந்து கொள்வேன். விண்வெளி மையத்தில் யோகா செய்யவும் திட்டமிட்டுள்ளேன். நான் விண்வெளிக்கு செல்வது தனிப்பட்ட பயணமாக இருந்தாலும், இது 140 கோடி இந்தியர்களின் பயணம்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.