புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றையும், தெலுங்கு கவிஞர் குருஜாதா அப்பாராவின் மேற்கோள் ஒன்றினையும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து 8-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது பட்ஜெட் உரைகளில் கவிஞர்கள், தத்துவவாதிகள், செவ்வியல் இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டுவதை தனித்துவமான வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிதியாண்டு (2025-26) பட்ஜெட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில், தனது நேரடி வரி விதிப்புகள் பற்றிக் குறிப்பிடும்போது திருக்குறளை மேற்கோள் காட்டினார். ஆட்சியாளர்களிடமிருந்து மக்கள் நல்லாட்சியை எதிர்பார்க்கிறார்கள் என்பதனை வலியுறுத்த, திருக்குறளின் சொங்கோன்மை என்னும் அதிகாரத்திலிருந்து 542-வது குறளை மேற்கோள்காட்டினார். வள்ளுவரின் வாய்மொழியில்,
வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி – என்று குறிப்பிட்டார். உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் தாம் வாழ்வதற்கு வான்மழையை எதிர்பார்த்து காத்திருப்பது போல, நாட்டின் மக்கள் மன்னனின் நல்லாட்சியை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்பது இதன் பொருள்.
மிகவும் பொருத்தமான இடத்தில் எடுத்தாளப்பட்டுள்ள இந்தக் குறள் ஓர் ஆட்சியாளருக்கான அடிப்படையைக் கூற சொல்லப்பட்டிருக்கிறதா அல்லது பொருளாதார பற்றாக்குறையை மறைப்பதற்காக கையாளப்பட்டிருக்கும் சொல்லாட்சியா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. ஏனென்றால், இத்தகைய மேற்கோள்களை குறிப்பிடுவது, கடுமையான உரைகளுக்கு ஓர் ஈர்ப்பைக் கொடுத்தாலும், அவை வசதியான கவனச்சிதறலாக மாறவும் வாய்ப்புள்ளது.
முத்தரசன் பதிலடி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பட்ஜெட் குறித்த தனது கருத்தில் மத்திய நிதியமைச்சரைப் போலவே திருக்குறளை மேற்கோள் காட்டி விமர்சித்துள்ளார். அவர் “வழக்கம் போல பன்னாட்டு குழும நிறுவனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ள நிதி நிலை அறிக்கை, அடித்தட்டு மக்களையும், உழைக்கும் மக்களையும் வஞ்சித்துள்ளது. “எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்” என வள்ளுவர் வழங்கிய அறிவுரையை நிதியமைச்சர் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
தெலுங்கு கவிஞரின் மேற்கோள்: திருக்குறளைப் போலவே இந்த முறை தனது மத்திய பட்ஜெட்டில் தெலுங்கு கவிஞர் குருஜாதா அப்பாராவின் மேற்கோளையும் சுட்டிக்காட்டியுள்ளார். 2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் திட்டத்தினைப் பற்றி பேசும்போது தெலுங்கு கவிஞர் குருஜாதா அப்பாராவின் மேற்கோள் ஒன்றினைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், தேசம் என்பது மண் அல்ல; தேசம் என்பது மக்களால் ஆனது என்று குருஜாதா அபாராவ் கூறி இருக்கிறார்.
இதைக் கருத்தில் கொண்டு வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வறுமை ஒழிப்பு, நல்ல பள்ளிக் கல்வி, தரமான எளிதாக அணுகக்கூடிய சுகாதாரம், திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகள், பொருளாதார செயல்பாடுகள், நமது நாட்டை உலகின் உணவுக் களஞ்சியமாக மாற்றுவதற்கான வழிகள் ஆகியவற்றை அடைய 10 துறைகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த குருஜாதா அப்பாராவ்? – ஆந்திரப் பிரதேசத்தின், ராயாவரத்தில் கடந்த 1861-ல் குருஜாத வெங்கட ராமதாஸு, கவுசல்யாம்மா தம்பதிக்கு மகனாக பிறந்தார். அப்பாராவ் தனது நாடகங்களுக்காக மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். அந்த காலத்தில் நிலவிய குழந்தைத் திருமணம் குறித்த நாடகமான கன்யசுல்கம் மற்றும் தேசமுனு போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. விஜயநகரதத்தில் மேற்படிப்பு படித்த இவர் தெலுங்கு, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார். தான் படித்த மகாராஜா கல்லூரியிலேயே அவர் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 1915-ம் ஆண்டு காலமானார்.