இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுவினர் தொடர்ந்து வன்முறை தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு படைகள் மீதும் பிற மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் தாக்குதல் மற்றும் சதி திட்டங்களை பாதுகாப்பு படையினர் அவ்வப்போது முறியடித்து வருகின்றனர்.
அவ்வகையில், பலுசிஸ்தானின் காலட் மாவட்டம் மங்கோசார் பகுதியில் நேற்று நள்ளிரவில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. சாலையில் தடைகளை ஏற்படுத்த முயன்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தபோது இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதிகள் தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் 18 பேர் உயிரிழந்தனர்.
இத்தகவலை ராணுவத்தின் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களை தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறி உள்ளது.
பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பானது, அரசாங்கத்துடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்ததையடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.