பிலடெல்ஃபியா: அமெரிக்காவின் பிலடெல்ஃபியா நகரில் சிறிய ரக தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 6 பேர் இருந்த நிலையில் அவர்களின் நிலை பற்றி உடனடித் தகவல் ஏதும் இல்லை.
இந்த விபத்து உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடந்துள்ளது. விமானம் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், பரபரப்பான சாலைகள் நிறைந்த, அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில் நொறுங்கி விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், வானில் திடீரென நெருப்புப் பந்துபோல் விமானம் வெடித்துச் சிதறும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் வடகிழக்கு பிலடெல்ஃபியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. மிசோரியில் உள்ள ஸ்ப்ரிங்ஃபீல்ட் – ப்ரான்சன் தேசிய விமான நிலையத்துக்கு பயணிக்கவிருந்தது என்று ஃபெடரல் விமான போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் வாஷிங்டனில் நடுவானில் பயணிகள் விமானம் – அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மோதிக் கொண்டதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த சோகம் விலகுவதற்குள் பிலடெல்ஃபியாவில் தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.