மாமல்லபுரம்: தனியார் நட்சத்திர சொகுசு விடுதியில் நடைபெற்ற முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பேரன் திருமண விழாவில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, கருப்புக்கொடி காட்டுவதற்காக தனியார் விடுதியில் தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் விஸ்வநாதன் உட்பட 2-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை முன்னெச்சரிக்கையாக போலீஸார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர சொகுசு விடுதியில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின், பேரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், குடியரசு துணை தலைவர் ஜகதீப்தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் 8 மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் என பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக விழா நடைபெற்ற சொகுசு விடுதிக்கு வந்தார்.
இதனால், திருவான்மியூர்-மாமல்லபுரம் இடையேயான ஈசிஆர் சாலையில் ஒரு சில இடங்களில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், மாற்று வழியாக ஓஎம்ஆர் சாலை வழியாக வாகனங்கள் பூஞ்சேரி வந்து ஈசிஆர் சாலையில் சென்றன.
மேலும், மத்திய அமைச்சர்கள் உட்பட முக்கியத் தலைவர்கள் விழாவில் பங்கேற்றதால், ஈசிஆர் சாலை மற்றும் கடற்கரை பகுதிகளில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், விழாவில் பங்கேற்பதற்காக நிகழ்ச்சி நடைபெறும் சொகுசு விடுதிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர இருந்த சில மணி நேரத்துக்கு முன்பாக, உள்துறை அமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவதற்காக அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மற்றும் அக்கட்சியின் தெலங்கானா மாநில பொறுப்பாளருமான விஸ்வநாதன் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, வாகனத்தில் அழைத்து சென்றனர்.