மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு தொழில், வர்த்தக சபைகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய (ஃபியோ) தென்மண்டல தலைவர் பா.கோபாலகிருஷ்ணன்: மத்திய பட்ஜெட் தனிநபர் வளர்ச்சி, தொழில் துறை முன்னேற்றம், ஏற்றுமதி வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் உருவாக்கும். பொருளாதார வளர்ச்சியுடன், அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது.
தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வி.கே.கிரீஷ் பாண்டியன்: எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான கிரெடிட் கார்டு உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது, எஸ்சிஎஸ்டி பெண் தொழில்முனைவோருக்கு ரூ.2 லட்சம் கடனுதவி, எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரித்திருப்பது ஆகியவை வரவேற்கத்தக்க அம்சங்கள். ஆனால், எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பு எளிமைப்படுத்தப்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.
ஆந்திரா தொழில் வர்த்தக சபை தலைவர் டாக்டர் வி.எல்.இந்திரா: இறக்குமதிக்கான வரி குறைப்பு, மூலதன செலவினம் அதிகரிப்பு, ஏஞ்சல் முதலீட்டாளர்களுக்கான வரி ரத்து, திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
இந்துஸ்தான் தொழில் வர்த்தக சபை தலைவர் லினேஷ் சனத்குமார்: எஸ்சிஎஸ்டி பிரிவைச் சேர்ந்த முதல் தலைமுறை பெண் தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி கடன் வழங்குவது வரவேற்கத்தக்கது. இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த பட்ஜெட் விவசாயம், கிராமப்புற தொழில்முனைவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத் (டான்ஸ்டியா) தலைவர் சி.கே.மோகன்: சூரியசக்தி பிவி பேட்டரிகள், மின்னணு வாகனங்களுக்கான பேட்டரிகள் போன்ற தொழில்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், எம்எஸ்எம்இ-ன் திருத்தப்பட்ட முதலீடு, வருவாய் அளவுகோல் சிறுதொழில்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மையைப் பாதிக்கும்.
இந்திய தொழில் வர்த்த சபை (சிஐஐ) தென்மண்டல தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி: மத்திய பட்ஜெட் தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும். 2047-ல் தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை அடைய பட்ஜெட் அறிவிப்புகள் உதவும்.
அப்பல்லோ மருத்துவக் குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி: அடுத்த 5 ஆண்டுகளில் 75 ஆயிரம் மருத்துவ இடங்கள் அதிகரித்தல், செயற்கை நுண்ணறிவு ஒப்புயர்வு மையம், தனியார் மருத்துவப் பங்களிப்புடன், மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்துல், 200 புற்றுநோய் மையங்கள் உள்ளிட்டவை மருத்துவக் கட்டமைப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். இந்த பட்ஜெட் நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சர்வதேச அளவில் முன்னெடுத்துச் செல்லும்.