மத்திய பட்ஜெட்: பொதுமக்கள் கருத்து | ஆதரவும், எதிர்ப்பும்

மதுரை: நாட்டின் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து வர்த்தக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்தினை பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன்: மத்திய அரசின் பட்ஜெட்டில் நிறைய வரவேற்கத்தக்க அறிவிப்புகள் உள்ளன. தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.12 லட்சமாக உயர்வு, மூத்த குடிமக்களுக்கு வட்டி வரம்பு உள்ளிட்ட நிறைய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

விவசாயத்துறை, எம்எஸ்எம்இ துறை, மூலதனத்துறை, ஏற்றுமதித்துறை ஆகிய நான்கு துறைகளையும் நான்கு இஞ்சின்களாக பல்வேறு அறிவிப்புகளை செயல்படுத்தியுள்ளனர். ஆனால் தமிழகத்திற்கு எந்த அறிவிப்பும் சொல்லாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. பிஹார் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு பெரும்பாலான திட்டங்கள் அந்த மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்துக்கு எய்ம்ஸ், மெட்ரோ, விமான நிலைய விரிவாக்கத்துக்கு எவ்வித அறிவிப்பும் நிதி ஒதுக்கீடும் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ரத்தினவேலு: தொழில் வணிகத்துறை மீதான பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தினால்தான் உள்நாட்டு உற்பத்தியும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று 2024-25ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கியத்துவம் கொடுத்து பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி பல புரட்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக வழக்கமான பாணியிலேயே மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்திற்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய வருமான வரிச்சட்டம் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். அதில் சட்டப்பிரிவுகள் எளிமையாக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போதைய பொருளாதார தேக்க நிலையில் 2024-25ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள பல முக்கிய பரிந்துரைகளை மத்திய பட்ஜெட்டில் அமலாக்கம் செய்யாதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டச் செயலாளர் பெ. சீனிவாசன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு வழங்குவதற்காக குழு அமைத்துள்ள நிலையில், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை பெறுவோருக்கு வரிச்சலுகை என்பதை ரூ.15 லட்சமாக உயர்த்தியிருக்க வேண்டும். மேலும், ரூ.12 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டக் கூடியவர்களுக்கு ஆரம்பமே 15% வரிவிதிப்பு என்பதை 5% வரி விதிப்பில் தொடங்கி அதன் பின்பு ஒவ்வொரு வகையினருக்கும் 10%,15%, 20% என உயர்த்தி இருக்கலாம்.

மேலும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. கல்விக்காக கடந்த பட்ஜெட்டை விட 0.03 அளவில் மட்டுமே உயர்வு என்பது வருத்தமளிக்கிறது. இன்சூரன்ஸில் அந்நிய முதலீடு 74%-லிருந்து 100% அனுமதி என்பது ஆபத்து. பழைய நடைமுறை வருமான வரி செலுத்தும் முறையில் சேமிப்பு தொடர்பான எவ்வித அறிவிப்புகளும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. பிப்.9-ம் தேதி வருமான வரி தொடர்பாக புதிய மாற்றங்களுடன் மசோதா எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,

ரயில் பயணிகள் நலச் சங்க பொதுச்செயலாளர் கே.பத்மநாதன்: மத்திய பட்ஜெட்டில் ரயில்வே அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு, புதிய வண்டிகளின் இயக்கம், கட்டண சலுகை, பயணிகள் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை. தமிழகத்திற்கு ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. அதேவேளையில் இந்திய மூத்த குடிமக்களுக்கு வருமான வரி பிடித்தம் வரம்பு ரூ.50,000-த்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்வு, தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.12 லட்சமாக உயர்வு, 120 இடங்களில் புதிய விமான வழித்தடங்கள், 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு ஆகியவை வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில கவுரவ தலைவர் எம்பி.ராமன்: மத்திய அரசிடம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதர விலை கேட்டும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் இன்றளவும் விவசாயிகள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து போராடி வருகின்றனர். அதுபற்றி எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதை 100% தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது விவசாயத்தை அழிக்கும் செயல். இதனை வாபஸ் பெற வேண்டும். ஒட்டுமொத்தத்தில் மத்திய அரசின் பட்ஜெட் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் 1 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டங்கள் என்ற அறிவிப்பு மட்டுமே உள்ளது. என்னென்ன திட்டங்கள் என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சங்கர்: நிதிநிலை அறிக்கையில் நாட்டின் வளர்ச்சி பாதையை அமைக்கும் வண்ணம் பல்வேறு புதிய திட்டங்களுடனும், விவசாயம், கல்வி, மருத்துவம், தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பு, போக்குவரத்து துறையில் பசுமை ஆற்றல், தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் உயர்வு அளித்தது வரவேற்கத்தக்கது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம், மதுரை தூத்துக்குடி தொழில் வணிகப்பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் பி.ஆர்.குமரன்: தனிநபர் வருமான வரியில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் வரவேற்கத்தக்கது. பொதுமக்களின் சேமிப்பு கணக்கிற்கு வட்டி விகிதத்தை (2.75% லிருந்து 4%) உயர்த்த வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லை என பொதுமக்களிடமிருந்து ரூ.35000 கோடி பிடித்தம் செய்ததை, இனிவரும் காலங்களில் இச்செயல் தொடரக்கூடாது. அதேபோல் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.23000 கோடிக்கு ஆண்டுதோறும் அனைத்து வங்கிகளும் சேர்ந்து இன்சூரன்ஸ்க்கு பிரீமியமாக செலுத்துவதில் மாற்றங்கள் கொண்டு வர கோரிக்கை வைத்தோம்.ஆனால் மக்களை பாதிக்கும் எந்த கோரிக்கையும் அறிவிக்கப்படாதது சற்று ஏமாற்றமே.

தொழில்முனைவோர் எம்.மவுனிகா: மத்திய அரசின் பட்ஜெட்டில் பல வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன. இதில் எம்எஸ்எம்இ துறையை பொறுத்தமட்டில் ரூ.1.50 லட்சம் கோடி அடுத்த 5 ஆண்டுகளில் கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரை கடன் வழங்கவும், எம்எஸ்எம்இ தொழில் முனைவோர்களுக்கு கடன் ரூ.10 கோடி வரை அதிகரித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

மலைச்சாமி – மதுரை: தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.12 லட்சமாக உயர்த்தியது உள்ளிட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தனியார் நிறுவன ஊழியர்கள் பயன்பெறுவார்கள். மூத்த குடிமக்களுக்கு வட்டி வருவாயில் ரூ.1 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்ற அறிவிப்பும், தனியார் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் வரை நன்கொடை அளிக்க வரி விலக்கு அளித்துள்ளதும் வரவேற்புக்குரியது.

அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் முத்துராஜா: இந்தியப் பொருளாதாரத்தின் நீண்ட கால பொருளாதாரக் கவலைகளான பின்தங்கிய வேளாண்மை சூழல், மேம்பாடுகள் குறைந்த ஊரக இந்தியா, பெண்கள் சார்ந்த பொருளாதார வளர்ச்சியின்மை, படித்த, ஆங்கிலம் தெரிந்த வேலை வாய்ப்புத்திறன் மிக்க இளைஞர்கள் வாய்ப்புப் பெற முடியாமை, முழுமையாக கவனிக்க முடியாமல் போன சிறு மற்றும் குறு தொழில்கள் மற்றும் புதிய மற்றும் புத்தாக்க தொழில்நுட்பம் நடைமுறை படுத்துவதில் சிக்கல்கள் இப்படி பல கவலைகளை கவனத்தில் கொண்டுள்ள இந்தாண்டு பட்ஜெட்டை பாராட்டலாம். பொருளாதார வளர்ச்சி, சமச்சீரான சமூக பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் புதிய தொழில்நுட்பம், பணித்துறையில் உள்ள நிரந்தரமாக இல்லாத உழைப்பாளர்கள் பாதுகாப்பு, அனைத்து இந்திய மொழிகளிலும் அறிவுசார் முன்னெடுப்பு, மறைமுக வரிகள் சீரமைப்பு மற்றும் 2047-ல் வளர்ந்த இந்தியாவாக மாற அடித்தளம் அமைத்தல் போன்றவை முக்கியமானவை.

மிக முக்கியமாக பலரின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த வருமான வரி விலக்கு இந்தியப் பொருளாதாரத்தில் நல்ல மாற்றத்தை தரும். 4.8 சதவீத பட்ஜெட் பற்றாக்குறையும், அதிகரித்துள்ள அண்ணியக்கடனும் கவலையளிக்கிறது. பன்னாட்டு அளவில் நிலவும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் டிரம்ப் பொருளாதார மூலம் நமக்கு உள்ள சிரமங்கள் இவை இரண்டையும் மனதில் வைத்து பார்க்கும்போது இந்தாண்டு பட்ஜெட் வரவேற்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.