புதுடெல்லி: யமுனை நீரின் தரம் குறித்த சர்ச்சைக்குரிய ‘விஷம் கலப்பு’ என்ற கருத்து குறித்த தனது விளக்கத்தை டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் ஆணையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சமர்ப்பித்தார். அரவிந்த் கேஜ்ரிவாலுடன் டெல்லி முதல்வர் அதிஷி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இருந்தனர். தனது கருத்து குறித்து வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் கடந்த வாரத்தில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அரவிந்த் கேஜ்ரிவால் தனது விளக்கத்தில், “எனது கருத்துக்கள் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு வழங்கப்படும் நீரில் ஆபத்தான அளவில் அமோனியா கலந்திருப்பதுடன் மட்டுமே தொடர்புடையது. விஷம் கலந்தது என்ற எனது முந்தைய கருத்துக்கள் தண்ணீரில் அமோனியாவின் அளவு அதிகரிப்பதை குறித்து மட்டுமே சொல்லப்பட்டது. இந்தச் சுற்றுச்சூழல் நெருக்கடியைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் அதற்கு இல்லை. தண்ணீரில் உள்ள அமோனியா அளவு ஜனவரி மாதத்தில், ஒரு லட்சத்தில் 7 பிபிஎம் என்ற அபாய அளவை எட்டியுள்ளது. இது பொதுசுகாதாரத்துக்கு மிகவும் அச்சுறுத்தலானது.
இந்த பிரச்சினை குறித்து ஹரியானா முதல்வருடன் பலமுறை பேசப்பட்டது. என்றாலும் அம்மாநில அரசு இந்த கலப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஹரியானா அரசின் செயலற்றத்தன்மை நீர் மாசுபாடு நெருக்கடிக்கு வழிவகுத்தது மட்டும் இல்லாமல், தேர்தலுக்கு முன்பாக டெல்லியின் ஆம் ஆத்மி அரசின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகவும் இருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஹரியானா முதல்வர் மீது குற்ற விசாரணை நடத்த வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக அவர் நிலைமையை மோசமாக்கியுள்ளார்.” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “தேர்தல் ஆணையத்தின் இரண்டாவது நோட்டீஸின் மொழி, அவர்கள் தங்களின் நடவடிக்கையை ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர் என்பதை உணர்த்துகிறது. ஆம் ஆத்மி கட்சி இந்த விஷயத்தை எழுப்பியது தொடர்பாக தேர்தல் ஆணையம் தூதுவரையே தாக்கியுள்ளது. எங்களின் வெற்றிக்கு நான் டெல்லி மக்களை வாழ்த்த விரும்புகிறேன். ஜனவரி 26 – 27ல் 7 பிபிஎம் ஆக இருந்த அமோனியா அளவு, தற்போது 2.1 பிபிஎம் அளவாக குறைந்துள்ளது.” என்று தெரிவித்தார்.
கேஜ்ரிவால் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், “தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை அழித்துவிட்டார். பணி ஓய்வுக்கு பிறகு அவர் பதவி எதிர்பார்க்கிறார். ராஜீவ் குமார் போன்று வேறு யாரும் தேர்தல் ஆணையத்தை இவ்வளவு சேதப்படுத்தவில்லை. அவர் விரும்பினால் டெல்லி தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம். நான் உயிருடன் இருக்கும் வரை டெல்லி மக்கள் விஷத் தண்ணீரை குடிக்க விடமாட்டேன். 2 நாட்களில் அவர்கள் என்னை கைது செய்வார்கள் என்று எனக்குத் தெரியும். இதற்கு நான் பயப்படமாட்டேன்.” என்றார்.
முன்னதாக, கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில், “அரசு விஷம் கலந்ததாக நீங்கள் கூறிய குற்றச்சாட்டுடன் யமுனையில் அமோனியா அளவு அதிகரித்துள்ள பிரச்சினையை இணைக்க வேண்டாம். யமுனையில் எந்த வகையான விஷம், எவ்வளவு, எந்த விதத்தில் கலப்பட்டது என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். டெல்லி நீர் வாரிய பொறியாளர்கள் எந்த இடத்தில் சோதனை நடத்தினர். எந்த வகை சோதனையில் அதில் விஷம் கண்டறியப்பட்டது என்பது குறித்து வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும்.” என்று அதில் கூறப்பட்டிருந்தது