சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய முறையில் இதய அறுவை சிகிச்சை செய்து வயதான பெண்மணிக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த 64 பெண்மணி சலிமா பேகம். மூச்சுத் திணறல், நெஞ்சு வலி காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில், இதயத்தில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் மகா தமனி வால்வு (அயோடா) மற்றும் மகா தமனி அடிப்பகுதி சுருங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அவருடைய உடல் தன்மைக்கு ஏற்ற பெரிய வால்வு பொருத்துவதற்கு மகா தமனி அடிப்பகுதி மறு சீரமைப்பு செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து, செயற்கை வால்வு பொருத்தி, சுருக்கத்தை சீராக்க செயற்கை திசு சீரமைப்பு (போவைன் பெரிகார்டியல் பேட்ச் – Bovine Pericardial Patch) மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
அதன்படி, மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் இல.பார்த்தசாரதி ஆலோசனை மற்றும் வழிக்காட்டுதலின்படி, சவாலான இந்த இதய அறுவை சிகிச்சையை மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சைத் துறை தலைவர் மருத்துவர் சரவண கிருஷ்ண ராஜா தலைமையில் மருத்துவர்கள் கவிதா, சிவசங்கரன், நவீன் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் கார்த்திகேயன், பவித்ரா, விக்னேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் சாத்தியமாக்கினர். சிகிச்சைக்கு பின்னர், பெண்மணி நலமுடன் உள்ளார். தனியார் மருத்துவமனையில் ரூ.10 லட்சம் வரை இந்த சிகிச்சை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இந்த சவாலான இதய அறுவை சிகிச்சையை தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மருத்துவர் சரவண கிருஷ்ண ராஜா கூறுகையில், “இந்த புதிய முறை இதய அறுவை சிகிச்சை முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது. மகா தமனி பிரச்சினை இருப்பவர்களுக்கு, அவர்களின் உடலின் தன்மைக்கு ஏற்ப வால்வு பொருத்த வேண்டும். இதுவே சிறிய வால்வு பொருத்தியிருந்தால், மூச்சுத் திணறல் குணமாகியிருக்காது. உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக இதுபோன்ற பிரச்சினை வயது மூப்பு, சரவாங்கி நோய் போன்றவற்றால் ஏற்படுகிறது. சரியான திட்டமிடுதல், செயல்படுத்துதால் மூலமாக இதய பிரச்சினைகளை அறுவை சிகிச்சைகள் மூஅல்ம் குணப்படுத்த முடியும்” என்றார்.