புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சனிக்கிழமை தாக்கல் செய்த நிலையில் இணையவாசிகள் பட்ஜெட் குறித்து மீம்ஸ்கள் வெளியிட்டு சமூகவலைதளத்தை தெறிக்க விட்டனர்.
தனது பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் நிர்மலா சீதாராமன் அனைத்து பகுதிகளுக்கான சீரான வளர்ச்சியின் மூலம் அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கை மத்திய அரசு அடையும் என்று கூறினார். பல மாற்றங்களுக்கு இடையில், அவர் தேர்தல் நடைபெற உள்ள பிஹார் மாநிலத்துக்கு பல திட்டங்களை அறிவித்தார். அதேபோல், வரிசெலுத்துவோரின் சுமைகளைக் குறைக்கம் வகையில் மாதாந்திர ஊதியதாரர்களுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு விலக்கு அறிவித்தார். எனவே இந்த அறிவிப்புகளை வரவேற்கும் வகையில் இணைவாசிகள் மீம்ஸ்களால் கொண்டாடினர்.
சிலர் நிதியமைச்சரின் ஏஐ உருவாக்கிய படங்களை பகிர்ந்திருந்தாலும், பலர் பாலிவுட் நடிகர்களின் படங்களின் மேல் மார்பிங்க் செய்யப்பட்ட படங்களை பகிர்ந்துள்ளனர்.
பட்ஜெட் குறித்து கவனம் ஈர்த்த சில மீம்ஸ்கள்:
பயனர் ஒருவர், மத்திய பட்ஜெட் 2025 -ல் திரும்பத் திரும்ப பெறப்பட்ட வார்த்தை என்று ஒரு மீம்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் அதிகம் சொல்லப்பட்ட வார்த்தையாக பிஹார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொரு பயனர், பிஹார் மேலாதிக்கம் நிறைந்த பட்ஜெட் என்று குறிப்பிட்டு, அமித் ஷாவும், பிரதமர் மோடியும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை வெள்ளத்தில் இருந்து மீட்டு வருவது போன்ற ஒரு படத்தினை பகிர்ந்துள்ளார்.
இன்னுமொரு பயனர் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு என்ற அறிவிப்பைக் குறிப்பிட்டு, ஹாலிவுட் படம் ஒன்றின் காட்சித் தொடர்களை பகிர்ந்துள்ளார்.
இதே அறிவிப்பு குறித்து மற்றொரு பயனர் கூறுகையில், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானத்துக்கு வரி இல்லை, எனது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.
வரி விலக்கு அறிவிப்பு குறித்து மிகவும் சுவாரஸ்யமாக ஒரு பயனர், மத்திய தர வர்க்கத்தினர் இன்று நிர்மலா ஜியை எப்படி பார்க்கிறார்கள் என்று கூறி, கையில் தாமரையுடன், தலையில் கிரீடத்துடன் இந்து மத கடவுள் போல தோன்றும் படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
NO INCOME TAX UPTO RS 12 LAKH!
மீம்ஸ்கள் ஒருபுறம் இருந்தாலும் மத்திய அமைச்சர் தொடர்ந்து 8வது முறையாக மத்திய பட்ஜெட்டினைத் தாக்கல் செய்தார். அதில் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்வினை இன்றைய பட்ஜெட்டில் அறிவித்தார். ஊதியதாரர்களின் நெஞ்சில் பால்வார்த்த இந்த பட்ஜெட் உரை 1 மணிநேரம் 17 நிமிடங்கள் நீண்டது. இது முந்தைய பட்ஜெட் உரையை விட 1 மணிநேரம் 25 நிமிடங்கள் குறைவாக இருந்தது.
பட்ஜெட் குறித்து கூறுகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவது, ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வது, தனியார் தொழில்துறை முதலீட்டு வளர்ச்சி, குடும்பங்களின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவது, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் சக்தி ஆகியவற்றில் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முந்தைய பட்ஜெட் தாக்கல்களைப் போலவே, இந்த முறையும் நிதியமைச்சரின் உடை அதிக கவனத்தை ஈர்த்தது. இம்முறை அவர் பிஹாரி மதுபானி கலையில் உருவான நுணுக்கமான தங்க இழை வேலைப்பாடுகள், ஓவியங்களுடன் கூடிய வெள்ளை நிறச்சேலையும், சிவப்பு நிற ரவிக்கையும் அணிந்திருந்தார். வழக்கம் போல தனது பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டியிருந்த நிர்மலா சீதாராமன், கூடுதலாக தெலுங்கு கவிஞரின் மேற்கோளையும் சுட்டிக்காட்டியிருந்தார்.