மும்பை,
இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.
இதில் குறிப்பாக விராட் கோலி தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை இழந்து வருகிறார். அவருடைய சுமாரான ஆட்டம் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதனால் கடுமையான விமர்சனங்களை அவர் சந்தித்துள்ளார்.
இதனையடுத்து உள்ளூர் போட்டிகளில், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது. அதன் காரணமாக 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் முடிவை எடுத்த விராட் கோலி டெல்லி அணிக்காக களமிறங்கினார். ஆனால் அந்த வாய்ப்பில் வெறும் 6 ரன்கள் மட்டுமே அடித்த அவர் மீண்டும் சொதப்பினார்.
இந்நிலையில் விராட் கோலி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவத்தைக் கொண்டுள்ளதாக இந்திய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். எனவே அவர் ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டிய அவசியமில்லை என்று ராயுடு குறிப்பிட்டுள்ளார். மேலும் நல்ல மரியாதையும் நம்பிக்கையும் கொடுத்தால் விராட் கோலி பார்முக்கு வந்து விடுவார் என்றும் ராயுடு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- “தற்போது விராட் கோலிக்கு ரஞ்சி கோப்பை தேவையில்லை. 81 சதங்கள் அடிப்பதற்கு போதுமானதாக இருந்த அவருடைய டெக்னிக் முன்னோக்கி செல்வதற்கும் நன்றாகவே இருக்கும். யாரும் அவரை வலுக்கட்டாயமாக விளையாட வைக்க வேண்டியதில்லை. அவரும் வலுக்கட்டாயமாக விளையாட வேண்டியதில்லை. அவர் அனைத்தையும் குறித்து நன்றாக உணர வேண்டும். அவருக்குள் இருக்கும் நெருப்பு மீண்டும் தாமாகவே பற்றிக் கொள்ளும். அடிப்படையில் அவர் மீது மரியாதையும் நம்பிக்கையும் வையுங்கள். அனைத்தையும் தாண்டி அவரை தனியாக விடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.