தமிழகத்தில் 32 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.16 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், 6-வது தேசிய உப்பு மாநாடு தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. சிஐஐ தூத்துக்குடி கிளைத் தலைவர் செலாஸ்டின் வில்லவராயர் வரவேற்றார். மாநாட்டு தலைவர் மைக்கேல் மோத்தா பேசினார். மாநாட்டை தொடங்கி வைத்து, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசியதாவது:
உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலம் முதல் இடத்திலும், ராஜஸ்தான் மாநிலம் 2-வது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. நாம் இரண்டாம் இடம் வரும் வகையில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தூத்துக்குடி, வேதாரண்யம் ஆகிய இடங்களில் உப்பு உற்பத்தி அதிகமாக நடைபெறுகிறது.
உப்புத் தொழிலில் இளைஞர்களிடம் அதிக ஆர்வம் இல்லை. இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
உப்புத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி, 32 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.16 கோடி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. விபத்து, இயற்கை மரணம், திருமணம் போன்றவற்றுக்கு உப்பளத் தொழிலாளர்கள் அரசின் உதவிகளைப் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு உப்புக் கழக மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், இந்திய உப்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பரத் ராவல் மற்றும் நாடு முழுவதும் இருந்து திரளான உப்பு உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.