இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் இடையே சிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை ‘Concussion Sub’ ஆக இந்திய அணி பயன்படுத்தியிருந்தது. ‘Concussion Sub’ விதிமுறையின்படி ஒத்தப் பண்புடைய வீரர்களைத்தான் மாற்று வீரர்களாக பயன்படுத்திக் கொள்ள முடியும் எனும் சூழலில் இந்திய அணி செய்திருப்பது விதிமீறல் எனும் விமர்சனம் எழுந்திருக்கிறது. இதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.
இந்திய அணிதான் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்தது. சிவம் துபே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்திருந்தார். ஓவர்டன் 20 வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் சிவம் துபே ஹெல்மட்டில் அடி வாங்கினார். இதனால் இன்னிங்ஸ் ப்ரேக்கின் போது துபேக்கு லேசான தலைவலி இருந்திருக்கிறது. இதைக் காரணம் காட்டி இந்திய அணியின் சார்பில் பௌலிங்கின் போது சிவம் துபேவுக்கு பதில் ஹர்ஷித் ராணாவை ‘Concussion Sub’ ஆக எடுத்துக்கொண்டார்கள். அவரும் உள்ளே இறங்கி 3 விக்கெட்டுகளை எடுத்துவிட்டார். போட்டி முடிந்த பிறகு பேசிய பட்லர்,’ஹர்ஷித் ராணாவை like to like replacement ஆக ஏற்றுக்கொள்ளவே முடியாதென கொந்தளித்துவிட்டார். வர்ணனையில் இருந்த கெவின் பீட்டர்சனுமே இந்திய அணியின் முடிவையும் அதற்கான நடுவரின் அனுமதியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
‘Concussion Sub ஆக நாங்கள் விரும்பும் வீரரின் பெயரை நடுவரிடம் கொடுத்தோம். அவர்தான் அதை ஒப்புக்கொண்டார்.’ என மொத்த பழியையும் நடுவரின் மீது தூக்கிப் போட்டிருக்கிறார் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல்.
உண்மையில் ‘Concussion Sub’ விதி என்னதான் சொல்கிறது என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.
ஐ.சி.சியின் 1.2.7 சட்டவிதியின் படி, ‘Concussion Sub விஷயத்தில் போட்டி நடுவரே ஆய்ந்து முடிவை எடுக்க வைக்க வேண்டும். Concussion sub கோரிக்கையை ஒரு அணி முன் வைக்கையில், அவர்கள் like to like replacement ஐத்தான் செய்கிறார்களா என்பதையும் அதனால் அவர்களுக்கு கூடுதல் சௌகரியம் கிடைக்கப் போவதில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.’ என அந்த விதி கூறுகிறது.
ஒரு வீரருக்கு தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அடிபட்டாலே இந்த Concussion Sub விதியை பயன்படுத்த முடியும். சிவம் துபே ஹெல்மட்டில் அடி வாங்கியிருக்கிறார். அவருக்கு லேசான தலைவலியும் இருந்திருக்கிறது. எனில், சிவம் துபேவுக்கு பதிலாக Concussion Sub ஐ பயன்படுத்துவோம் என முடிவெடுத்ததில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், யாரை பயன்படுத்தினார்கள் என்பதில்தான் பிரச்சனை.
சிவம் துபே ஒரு ஆல்ரவுண்டர். ஹர்ஷித் ராணா ஒரு வேகப்பந்து வீச்சாளர். சிவம் துபேவை பல சமயங்களில் 2 ஓவர்கள் வீசுவதற்குதான் பயன்படுத்துவார்கள். அதற்குக் கூட சில போட்டிகளில் பயன்படுத்துவதில்லை. கடைசி 12 போட்டிகளில் 9 ஓவர்களை மட்டும்தான் வீசியிருக்கிறார்.
கிட்டத்தட்ட அவர் ஒரு முழுமையான பேட்டராகத்தான் ஆடி வருகிறார். இருந்தாலும் ஆல்ரவுண்டர் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி பார்த்தாலும் ஹர்ஷித் ராணாவை அவருக்கான ஒத்த பண்புடைய மாற்று வீரராக கருதவே முடியாது. ஏனெனில், அவர் முழுமையான வேகப்பந்து வீச்சாளர். இந்திய அணி அவரை பந்துவீச்சாளராகத்தான் பார்க்கிறது. அப்படியிருக்க பேட்டிங்கிற்கு துபேவை பயன்படுத்திவிட்டு பௌலிங்கிற்கு ராணாவை பயன்படுத்துவது எப்படி சரியாக இருக்கும்? ஐ.சி.சியின் விதிப்படியே பார்த்தாலும் அது இந்திய அணிக்கு கூடுதல் சௌகரியத்தைதானே கொடுத்திருக்கிறது.
இந்திய அணியின் சார்பில் பழி மொத்தத்தையும் போட்டி நடுவரின் மீது போடுகிறார்கள். அதில் லாஜிக்கும் இருக்கிறது. ஏனெனில், இறுதி முடிவு நடுவருடையதுதான். ஆனால், தார்மீக பொறுப்பென்று ஒன்று இருக்கிறது. கம்பீர், மோர்கல் போன்ற ஜாம்பவான்கள் பயிற்சியாளர்களாக அமர்ந்திருக்கும் இந்திய அணிக்கு இந்த விதிமுறையை பற்றி தெளிவாக தெரியாதா என்ன? எப்படி பார்த்தாலும் இந்திய அணி எடுத்த முடிவு விதிகளின் படியும் அறத்தின் படியும் என எல்லாவிதத்திலுமே தவறான முடிவுதான்.
இதைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.