புதுடெல்லி: தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு, நடுத்தர மக்கள் பலன் பெறும் வகையிலான வரிச் சலுகைகள் உள்ளிட்ட பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று காலை 11.02 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அமளிக்கு இடையே.. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கூச்சலிட கடும் அமளிக்கு மத்தியில் நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். சில நிமிடங்கள் தொடர்ந்து கூச்சலிட்ட எதிர்க்கட்சியினர் பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தனது உரையில் வெளியிட்டு வரும் அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்…
* உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கும் பணிகளைச் செய்து வருகிறோம். அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்கில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
வேளாண் துறைக்கான அறிவிப்புகள்: * வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* பருப்பு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.
* அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.
* பருத்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* பிஹாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும்
* கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகள் குறுகிய கால கடன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
* எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற 6 ஆண்டு கால சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* பிஹாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் (நிஃப்டம் – NIFTEM) அமைக்கப்படும்.
தொழில்முனைவோருக்கு சிறப்பு அறிவிப்பு * பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு, புதிதாக தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி வழங்கப்படும்.
* காலணி மற்றும் தோல் துறையைப் பொருத்தவரையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* பொம்மை உற்பத்தித் துறையில் இந்தியாவை அந்தச் சந்தைக்கான சர்வதேச மையமாக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் கூடுதல் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.
* நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் 10,000 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.
* ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது.
* அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களில் புதிதாக 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.
இவ்வாறாக நிதியமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.