பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2025- 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகை உச்ச வரம்பு 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், “வருமான வரியை எளிமைப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துவிட்டது. இது தொடர்பான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அடுத்த வாரம் அனுபப்படும் இந்த மசோதா ஸ்டாண்டிங் கமிட்டிக்கு அனுப்பப்படும். பழைய வரி முறையை மீண்டும் செயல்படுத்த அரசு விரும்பவில்லை. வருமான வரி விகிதங்களில் மாற்றங்கள் கொண்டு வந்தது அனைத்து அடுக்குகளிலும் உள்ள மக்களுக்கும் பயனளிக்கும். இந்த பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் `விக்சித் பாரத்’ பற்றி பல விஷயங்கள் எடுத்துரைக்கிறது. இந்த பட்ஜெட்டில் கிராமப்புற முன்னேற்றம் மற்றும் நகர்புற மேம்பாடு என இரண்டு விஷயங்களுக்கும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. முக்கியமாக, இந்த பட்ஜெட் தொழிலாளர்களை கவனத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறது. மூலதன முதலீட்டுக்கான (Capital Expenditure) பொது செலவினங்களில் எந்தக் குறைப்பும் இல்லை. அரசால் மேற்கொள்ளப்படும் மூலதன முதலீடுகள் காட்டியுள்ள பெருக்கு விளைவுக்கு (multiplier effect) நாங்கள் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறோம். வருமான வரி விகிதங்களில் மாற்றம் செய்வதன் மூலம் மக்களின் கைகளில் அதிக பணம் இருக்கும். வருமான வரி தள்ளுபடியை 12 லட்சமாக உயர்த்தியதால் 1 கோடி மக்கள் இனி வருமான வரியை செலுத்த வேண்டியதில்லை.” எனக் கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…