அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல்லுக்கு ஒரே விலைதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையும் அவ்வாறே வழங்கப்படுகிறது என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
நெல் கொள்முதல் பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்த கருத்துக்கு உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
2016-ம் ஆண்டிலிருந்து தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் டெல்டா அல்லாத மாவட்டங்களில் தேவையைக் கருதி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குகிறது.
இந்த அரசு பொறுப்பேற்றவுடன் மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திடுவதை முறைப்படுத்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தேவையான இடங்களில் உடனுக்குடன் நெல் கொள்முதல் நிலையம் திறந்திட அனுமதி வழங்குகிறது.
இதன் அடிப்படையில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் திறக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் தவிர தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்துக்கு அதன் கோரிக்கையைப் பரிசீலனை செய்து ஒருசில இடங்களில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில்தான் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் நெல் கொள்முதல் செய்கிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் நடத்தும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஒரே விலையில்தான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
அதேபோல், விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நெல்லுக்கான ஊக்கத்தொகையும் அவ்வாறே வழங்கப்படுகிறது. ஆனால், நெல் கொள்முதல் பற்றி கருத்து தெரிவித்திருப்பது சரிதானா என்பது பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதித்தான் எந்த முடிவையும் திராவிட மாடல் அரசு எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.