புதுடெல்லி: சிரியாவில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் வெடிகுண்டு வெடித்ததில் 14 பெண்கள் மற்றும் ஓர் ஆண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 15 பெண்கள் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். இருப்பினும், பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இந்தத் தாக்குதலில் 18 பெண்கள் உயிரிழந்ததாக கூறியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. ஒரு மாதத்துக்குள் மன்பிஜில் நடந்த ஏழாவது கார் குண்டுவெடிப்பு இது என்று சிவில் பாதுகாப்பு துணை இயக்குநர் முனீர் முஸ்தபா தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி (சனிக்கிழமை) மனிபிஜ் நகரத்தில் நிகழ்த்தப்பட்ட இதேபோன்ற ஒரு கார் வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. துருக்கியின் ஆதரவில் இயங்கி வரும் சிரிய தேசிய ராணுவப் பிரிவுகள் மற்றும் அமெரிக்க ஆதரவு குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கிறது. இந்த நிலையில், மன்பிஜ் நகரத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.