தமிழகம் முழுவதும் இந்திய கம்யூ. பிப்.8-ல் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

சென்னை: “எல்லா வழிகளிலும் தமிழகத்தை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் முறையில் பிப்.8-ம் தேதி, சனிக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் மக்கள் விரோத பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிப்.1ம் தேதி, மத்திய அரசின் நிதியமைச்சர் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் “தமிழ்நாடு” என்ற வார்த்தை கூட இடம் பெறக் கூடாது என்ற வன்மம் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெளிப்பட்டுள்ளது. கூட்டாட்சி கோட்பாடுகளில் உறுதி காட்டி, மாநில உரிமைகளை நிலைநாட்ட தமிழ்நாடு எடுத்து வரும் முயற்சிகளை நிதிநிலை அறிக்கை முற்றாக நிராகரித்து, புறக்கணித்துள்ளது. அரசியல் காரணங்களை மனதில் கொண்டு தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.

நிதிநிலை அறிக்கையில் மாத வருவாய் பிரிவினரும், நடுத்தரப் பகுதி மக்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் வருமான வரி விலக்கு கோரிக்கை ஏற்கப்பட்டு, மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு குழும நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியைக் காட்டிலும் கூடுதலாக இருப்பதை மத்திய கணக்கு தணிக்கைக் குழுவின் அறிக்கை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பெரும் நிறுவனங்களிடம் சுமார் ரூ.20 லட்சம் கோடி வரை வசூலிக்கப்படாமல் விடப்பட்ட பெரும் தொகை குறித்து நிதிநிலை அறிக்கை மூச்சு கூட விடவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் மூலம் உடல் உழைப்பு மட்டுமே வாழ்வாதாரம் என்ற நிலையில் வாழ்ந்து வரும் ஊரகப்பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர் குடும்பங்கள் தலா ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற ரூ 4.50 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருவதை நிதி நிலை அறிக்கை கருத்தில் கொள்ளாமல் வெறும் ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே அறிவித்துள்ளது.

வருமான உத்தரவாதம் இல்லாமல், அரைகுறை வருமானம் பெற்று வாழ்ந்து வரும் 130 கோடி மக்களை ஏமாற்றியுள்ள நிதிநிலை அறிக்கை, அவர்களிடம் வசூலிக்கும் மறைமுக வரியை உயர்த்தி மேலும் சுமை ஏற்றியுள்ளது. உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தி சரிந்து வருவதை நிதிநிலை அறிக்கை கண் திறந்து பார்க்கவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை கருத்தில் கொண்டால், பெட்ரோல், டீசல் விலைகளை பெருமளவு குறைக்க வாய்ப்பு இருந்தும், அதனை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

தமிழக அரசு கடந்த மூன்றாண்டுகளாக இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டது. இதனால் பேரிழப்புகளையும், பெரும் சேதாரத்தையும் சந்தித்தது. இந்த இயற்கை பேரிடர் இழப்புகளை ஈடு செய்து, மறுவாழ்வை புனரமைப்புக்காக தேசிய பேரிடர் நிதியுதவி கேட்டு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை நிதி நிலை அறிக்கையும் ஏமாற்றி விட்டது.புதிய ரயில் திட்டங்கள், இரட்டை வழி ரயில்பாதை அமைப்பு, ரயில் பாதை மின்மயமாக்கல், மெட்ரோ ரெயில் விரிவாக்கம், மதுரை கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இப்படி எல்லா வழிகளிலும் தமிழகத்தை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் முறையில் பிப்.8ம் தேதி, சனிக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் மக்கள் விரோத பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.தமிழகத்தின் வளர்ச்சியிலும் , மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட அனைத்துப் பகுதி மக்களும், தமிழகத்தைப் புறக்கணித்துள்ள மக்கள் விரோத மத்திய அரசின் பட்ஜெட் எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.