தமிழக மீனவர்கள் கைது: தூதரக நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கை வசம் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று (பிப்.3) கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் , மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பிப்.2ம் தேதி அன்று மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் இன்று (பிப்.3) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 27 நாட்களில், 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 63 மீனவர்கள் மற்றும் 5 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டில் 36 வெவ்வேறு சம்பவங்களில் 530 மீனவர்கள் மற்றும் 71 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை சிறையிலுள்ள 97 மீனவர்களும், கைப்பற்றப்பட்டுள்ள 216 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து இதுபோன்று நடைபெற்று வருவது, இந்தச் சிக்கலான பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதும், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்காமல் இருப்பதும், கடலோரப் பகுதியில் வாழும் மீனவ சமுதாயத்தினருக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான தொடர் கைது நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்வதுடன், பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்கிறது.

எனவே, நமது இந்திய மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவதை நிறுத்தவும், இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும், உடனடியாக உயர்மட்ட தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார், என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.