“தீ விபத்தில் சதி திட்டம்” – பெண் ஏடிஜிபி குற்றச்சாட்டும் சங்கர் ஜிவால் மறுப்பும்: பின்னணி என்ன?

தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனது அறையில் தீ வைக்கப்பட்டதாக ஏடிஜிபி எழுப்பிய குற்றச்சாட்டை டிஜிபி மறுத்துள்ளார். மேலும், பெண் ஏடிஜிபி அறையில் நிகழ்ந்த தீ விபத்துக்கு சதித்திட்டம் காரணம் அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வருபவர் கல்பனா நாயக். இவர், கடந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் ஐஜியாக பணியாற்றினார். அப்போது, ஜூலை 28-ம் தேதி அவரது அலுவலக அறை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சேதம் அடைந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கல்பனா நாயக் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், ‘தனது அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததில் சதி திட்டம் இருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சதித் திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளதாவும் தெரிவித்திருந்தார். மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள குறைப்பாடுகளை நான் சுட்டிக்காட்டியதால் இந்த சதித் திட்டம் நடந்து இருக்கலாம் என்று தான் கருதுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்து டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டு ஆக. 14-ம் தேதி கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்கிடம் இருந்து கடிதம் வந்தது. அது தொடர்பாக உடனடியாக விசாரிக்க சென்னை காவல் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர், தடயவியல் துறை நிபுணர்கள், தமிழ்நாடு தீயணைப்புத் துறை அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மற்றும் தனியார் ஏர்கண்டிஷன் நிறுவன நிபுணர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையில், அறையில் உள்ள காப்பர் வயர்கள் மூலம் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பெட்ரோல், டீசல் போன்ற எளிதில் தீப்பிடிக்க கூடிய எந்த எரிபொருளும் அறையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதித் திட்டமும் இல்லை என்று நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2023-ம் ஆண்டு 750 எஸ்ஐக்கள் மற்றும் தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் 2024 ஜன.30 அன்று வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 5 விண்ணப்பதாரர்கள் வழக்கு தொடர்ந்தனர். மேலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதில் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும் வழிகாட்டுதல் அடிப்படையிலும் தேர்வு முடிவுகள் 2024 அக்.3-ம் தேதி வெளியிடப்பட்டன. எனவே கூடுதல் டிஜிபி கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையும் இல்லை. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இதனிடையே இந்த பிரச்சினை தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் சீனிவாசலு தலைமையிலான தனிப்படை போலீஸார் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 31 பேரிடம் விசாரித்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.