புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனின் தனிச் செயலராக இருந்த நெடுஞ்செழியன் திடீரென மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக காரைக்கால் ஆட்சியராக இருந்த மணிகண்டன் ஐ.ஏ.எஸ். ஆளுநரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தமாக 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறைகள் மாற்றப்பட்டு, கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளன.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆளுநரின் தனிச் செயலராக இருந்த செயலர் நெடுஞ்செழியன் தொடர்ந்து நீடித்து வந்தார். இந்நிலையில், அவர் திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக காரைக்கால் ஆட்சியர் மணிகண்டனை துணைநிலை ஆளுநரின் தனிச்செயலராக நியமித்துள்ளனர்.
தொடர்ந்து அரசு திட்டப் பணிகளை கவனித்து வந்த ஆளுநர், அடுத்தக்கட்ட செயல்பாட்டையொட்டி தற்போது தனது தனிச் செயலர் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி பொறுப்புகளை மாற்றி அமைத்துள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவுப்படி, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு தலைமைச் செயலர் சரத்சவுகான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
துணை நிலை ஆளுநர் தனிச் செயலராக இருந்த நெடுஞ்செழியன் ஐ.ஏ.எஸ். வேளாண்மை, கால்நடை மருத்துவம், இந்து சமய அறநிலையத்துறை, மற்றும் வக்புவாரியம், கலை மற்றும் பண்பாட்டுத் துறை செயலராக செயல்படுவார். காரைக்கால் ஆட்சியர் மணிக்கண்டன் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு ஆளுநரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுற்றுலா, மீன்வளத் துறை செயலர் பொறுப்பும் கூடுதலாக தரப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி சோமசேகர் அப்பாராவ் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஜவஹர், முத்தம்மா, சுந்தரேசன், ஜெயந்த்குமார் ரே, கேசவன். குலோத்துங்கன் ஆகியோருக்கும் துறைகள் மாற்றப்பட்டு, கூடுதல் பொறுப்புகள் தரப்பட்டுள்ளன.