மகா கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளில் மகா கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் இரு அவைகளிலும் குழப்பம் ஏற்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது கடந்த வாரத்தில் மவுனி அமாவசை அன்று மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தது குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். ‘கும்பா பே ஜவாப் தோ’ (கும்ப மேளா சம்பவம் குறித்து பதில் சொல்லுங்கள்) என்று முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சிகள், ஜனவரி 29-ம் தேதி உயிரிழந்தவர்களின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன. மேலும், அரசு தெரிவித்த எண்ணிக்கையை விட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் குற்றம்சாட்டின.

இதனிடையே, நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டாம் என்று நாடாளுமன்ற விகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சிகளை சாடிய சபாநாயகர்: கேள்வி நேரத்தின் போது பேசிய மக்களவை சபாநாயகர், “இந்திய மக்கள் உங்களை முழக்கங்கள் எழுப்புவதற்காகவும், அவை நடவடிக்கைகளைத் தொந்தரவு செய்வதற்காகவும் தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா?” என்று கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை கடுமையாக சாடினார்.

9 நோட்டீஸ்களை நிராகரித்த மாநிலங்களைவைத் தலைவர்: மாநிலங்களவையிலும் கும்பமேளா குறித்து விவாதித்த வேண்டும் என்று உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, அவைத்தலைவர் தன்கர்,”விதி 267-ன் கீழ் எனக்கு 9 நோட்டீஸ்கள் வந்துள்ளன. கடந்த 2022 டிசம்ர் 8 மற்றும் டிசம்பர் 19 தேதிகளில் விதி 267-ஐ எப்படி கையாளவேண்டும் என்று நான் அளித்த விரிவான உத்தரவுகளை உறுப்பினர்கள் நினைவு கூரலாம். வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ்கள் அந்த உத்தரவுகளை பூர்த்தி செய்யவில்லை என்று கூறி நேரமில்லா நேர விவாதத்தைத் தொடர்ந்தார்.

மேலும் வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ்கள், கும்பமேளாவின் தவறான நிர்வாகம், அரசியலமைப்பு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை தொடர்த்து அவமதிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பது குறித்து இருக்கின்றன” என்றார். நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கும்ப மேளா கூட்ட நெரிசல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின.

முன்னதாக, ஜன.31ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றினார். இரண்டாவது நாளான பிப்.1ம் தேதி மத்திய நிதியமைச்சர் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்.13ம் தேதி வரை நடக்கிறது. அதற்கு பின்பு இரண்டாவது அமர்வு மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரை நடக்க இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.