சென்னை: ராகிங் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததாக தமிழகத்தில் 2 கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 18 மருத்துவ கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் நடைபெறாமல் தடுப்பதற்கான விதிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) கடந்த 2009-ம் ஆண்டு வெளியிட்டது. இவற்றை பின்பற்றி கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறும் யுஜிசி உத்தரவிட்டது.
இந்த நிலையில், ராகிங் தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாததாக கூறி, தமிழகத்தில் சென்னை சவீதா, வேலூர் சிஎம்சி ஆகிய 2 கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 18 மருத்துவ கல்லூரி நிர்வாகங்களிடம் விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தங்கள் மருத்துவ கல்லூரியில் ராகிங் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்லூரியில் சேரும் ஒவ்வொரு மாணவரும், அவரது பெற்றோரும் சேர்க்கை நேரத்திலும், ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் ராகிங் எதிர்ப்பு உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவன வளாகத்தில் ராகிங் தொடர்பான சம்பவங்களை தடுக்க இந்த உறுதிமொழி முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆனால், மாணவர்களிடம் இருந்து ராகிங் எதிர்ப்பு உறுதிமொழியை பெற தங்கள் கல்வி நிறுவனம் தவறிவிட்டது. இது விதிமீறல் மட்டுமின்றி, மாணவர்களின் பாதுகாப்பிலும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இதற்காக உங்கள் நிறுவனம் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது. இதுகுறித்து உரிய காரணம் தெரிவிக்க வேண்டும்.
இந்த சூழலை சரிசெய்ய எடுக்கப் போகும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனிமேல், ராகிங் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதையும் உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு சில கல்லூரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.