விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இரண்டாமாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு மதுரையில் தவெக நிர்வாகிகளால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டிருக்கிறார்.
வெற்றிமாறனின் படங்களில் அரசியல் பேசியிருந்தாலும் தனிப்பட்டு எந்த அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளிலும் அவர் பெரிதாகக் கலந்துகொண்டதில்லை. இந்நிலையில் தவெகவின் நிகழ்வில் வெற்றிமாறன் கலந்துகொண்டதன் பின்னணி என்னவென்பதை விசாரித்தோம்.
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலைத் தழுவியே இந்தப் படம் எடுக்கப்படவிருக்கிறது. அந்த நாவல் ஜல்லிக்கட்டை மையப்படுத்தியது. இதற்காக நாட்டு மாடுகள் பற்றியும் ஜல்லிக்கட்டு பற்றியும் நுட்பமான தகவல்களை அறிந்துகொள்ளும் வேலையில் வெற்றிமாறன் இறங்கியிருக்கிறார். இந்நிலையில்தான், ‘சித்தா’ படத்தின் இயக்குனர் அருண் குமாரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வெற்றிமாறன் மதுரை சென்றிருக்கிறார்.
இந்த சமயத்தில்தான் மதுரை வடக்கை சேர்ந்த தவெக நிர்வாகிகளும் தவெகவின் இரண்டாமாண்டைக் கொண்டாடும் வகையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வெற்றிமாறன் அந்தத் தேதியில் மதுரையில் இருப்பதை அறிந்து வெற்றிமாறனுக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு அழைத்திருக்கின்றனர். ‘வாடிவாசல்’ படத்துக்காக நாட்டு மாடுகள் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருக்கும் வெற்றிமாறனும் தவெக நிர்வாகிகளின் அழைப்பை ஏற்றிருக்கிறார். ஆனால்,
‘இந்த விஷயம் அரசியல் ஆகிடக்கூடாது. மாடுகள் சம்பந்தமாக அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்திலேயே வருகிறேன்.’ என வெற்றிமாறன் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்துதான் வெற்றி மாறன் அந்த நிகழ்வில் கலந்திருக்கிறார்.
மொத்தம் 3 ரவுண்ட்களாக போட்டி நடந்திருக்கிறது. அதில் 2 ரவுண்ட்களை மிக ஆர்வமாக கூர்மையாகக் கவனித்துப் பார்த்துவிட்டுக் கிளம்பியிருக்கிறார் வெற்றிமாறன்.