புதுடெல்லி: ராணுவத் தளபதி கூறியது என குறிப்பிட்டு மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்தது தவறான குற்றச்சாட்டு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிப்.3, 2025 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, இந்திய – சீன எல்லையில் நிலவும் நிலைமை குறித்த ராணுவத் தளபதியின் அறிக்கை குறித்து தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். ராணுவத் தலைவரின் கருத்துகள், இரு தரப்பினரின் பாரம்பரிய ரோந்துப் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதை மட்டுமே குறிப்பிட்டன. அதேநேரத்தில், சமீபத்திய படைவிலகலின் ஒரு பகுதியாக அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, பாரம்பரிய ரோந்து முறை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை நாடாளுமன்றத்தில் அரசு பகிர்ந்துள்ளது.
ராணுவத் தளபதி கூறியது என்று குறிப்பிட்டு ராகுல் காந்தி கூறிய வார்த்தைகளை அவர் எந்த நேரத்திலும் பேசியதில்லை. தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுவது ஆழ்ந்த வருத்தத்துக்குரியது. இந்தியாவுக்குள் சீனா நுழைந்த பகுதி என்று ஏதேனும் இருந்தால், அது 1962 மோதலின் விளைவாக அக்சாய் சினில் நுழைந்த 38,000 சதுர கி.மீ. பரப்பளவும், 1963-இல் பாகிஸ்தானால் சீனாவுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட 5,180 சதுர கிலோ மீட்டருமே ஆகும். நமது வரலாற்றின் இந்தக் கட்டத்தைப் பற்றி ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவையில் ராகுல் காந்தி கூறியது என்ன? – குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை மீது நேற்று மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கிலோ மீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது. இதை ராணுவ தளபதியே தெரிவித்துள்ளார்.
நமது நாட்டு எல்லைக்குள் சீனர்கள் ஊடுருவி இருப்பது உண்மை. அதற்கான காரணம் மிகவும் முக்கியமானது. மேக் இன் இந்தியா திட்டத்தின் தோல்விதான் இதற்குக் காரணம். இந்தியா உற்பத்தி செய்ய மறுப்பதே சீனா நமது எல்லைக்குள் இருப்பதற்கான காரணம்” என்று ராகுல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.