புதுடெல்லி,
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 247 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 248 ரன் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 97 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 150 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது அபிஷேக் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆர்ச்சர் வீசிய பந்தில் சாம்சனுக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக போட்டியின் 2வது இன்னிங்சில் சாம்சன் விக்கெட் கீப்பிங் பணியை செய்யவில்லை. அவருக்கு பதிலாக துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சுமார் ஒரு மாத காலம் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதிலும் சந்தேகம் நிலவுகிறது.
இந்நிலையில், சஞ்சு சாம்சன் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, பி.சி.சி.ஐ. தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, சாம்சனுக்கு அவரது வலது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் காயத்திலிருந்து குணமாகி வலைப்பயிற்சியை மேற்கொள்ள சுமார் 5 முதல் 6 வாரங்கள் ஆகலாம்.
அதனால் வரும் 8ம் தேதி தொடங்கவுள்ள ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதிப்போட்டியில் கேரள அணிக்காக அவர் விளையாட வாய்ப்பில்லை. அதேசமயம் அவரது காயம் விரைவில் குணமாகும் பட்சத்தில் அவர் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.