சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்ற தொடங்கிய அமெரிக்கா

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தனது தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது போன்றவற்றை வலியுறுத்தி பேசிவந்தார்.

தற்போது தேர்தலில் வென்று அதிபராக பொறுப்பேற்றதும், டிரம்ப் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக மெக்சிகோ எல்லையை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய டிரம்ப், அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய மக்களுக்கு எதிரான தணிக்கை மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இத்தகைய சூழலில் தான், சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் ராணுவ விமானம் இந்தியா புறப்பட்டுள்ளது. ஆனால் விமானம் எப்போது அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது. எப்போது இந்தியா வந்து சேர்கிறது போன்ற தகவல்கள் ஏதும் இல்லை. இந்நிலையில் இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், சி-17 விமானம் ஒன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றுள்ளது எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேட்ட போது, அவர்களும் விரிவான பதிலளிக்க மறுத்துவிட்டனர். அமெரிக்க தூதரக செய்தி தொடர்பாளர் கூறும் போது, ” நான் எந்த ஒரு தகவலும் இது தொடர்பாக பகிர முடியாது. ஆனால், எல்லை விவகாரம் மற்றும் குடியேற்ற சட்டங்களை அமெரிக்கா கடுமையாக்கி இருக்கிறது என்பது பற்றி மட்டும் என்னால் சொல்ல முடியும்” என்றார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட இந்த ராணுவ விமானத்தில் 205 இந்தியர்கள் ஏற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து ஆவணங்களும் சரிபார்த்த பிறகு இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.