புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (பிப்.5) நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக டெல்லியில் ஆர்எஸ்எஸ் 50,000 வரவேற்பறை கூட்டங்களை நடத்தி உள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நாளை (பிப். 5) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 13,766 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கடைசி இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு முன்பு, காங்கிரஸ் 15 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சியில் இருந்தது. பாஜக 27 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இல்லை.
இந்நிலையில், டெல்லியில் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி முதல் பலரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பாஜகவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது பாணியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ரீதியாக, 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், 30 மாவட்டங்கள் மற்றும் 173 நகரங்கள் உள்ளன. இவற்றில், 50,000 வரவேற்பறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே இதற்கான திட்டமிடலை ஆர்எஸ்எஸ் துவங்கி உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் அலுவலகங்கள், நிறுவனங்கள், ஷாப்பிங் மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற பகுதிகளில் சிறிய குழுக்களாக இந்த “வரவேற்பறை கூட்டங்கள்” நடத்தப்பட்டுள்ளன. இவற்றில், ஒவ்வொரு மண்டலத்திலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மொத்தமுள்ள 8 மண்டலங்களில், 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த மூத்த ஆர்எஸ்எஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், தேசிய நலனை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்களின் நோக்கம். பாஜக தேசிய நலனுக்காக செயல்படுவதால், நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கக் கேட்டோம்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டங்களில், பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததோடு, சுற்றுச்சூழல் மாசுபாடு, குடும்ப மதிப்புகள், ஊழல், சமூக நல்லிணக்கம் மற்றும் சுதேசி போன்ற விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ஒவ்வொரு தேர்தலுக்கும் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ்ஸின் பங்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. சமீபத்திய ஹரியானா தேர்தலில், பாஜக 90 இடங்களில் 48 இடங்களை வென்றது. மகாராஷ்டிராவில், பாஜக, சிவசேனா (ஷிண்டே) மற்றும் என்சிபி (அஜித் பவார்) கூட்டணி 288 இடங்களில் 237 இடங்களை வென்றது. இந்த தேர்தல்களில் ஆர்எஸ்எஸ்-ன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.