“தமிழகத்தின் தேவையை மத்திய அரசு மறுக்கிறது” – மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

புதுடெல்லி: தமிழகத்தின் தேவையை மத்திய அரசு மறுப்பதாக, மக்களவையில் எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்து பேசியுள்ளார்.

மக்களவையில் இன்று குடியரசு தலைவர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தில் எம்.பி. சு.வெங்கடேசன் பேசியது: “உலக மக்கள் தொகையில் 20 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா உலக வர்த்தகத்தில் 2 சதவீதத்தை மட்டுமே தன் பங்காகக் கொண்டிருக்கிறது. சேவைத்துறையில் 4.6 சதவீதமும் , உலக சுற்றுலாத்துறையில் 1.5 சதவீதமும் மட்டுமே நம்முடைய பங்காக இருக்கிறது.

நம்முடைய இந்த பின்தங்கிய நிலைக்கு நாம் தான் காரணம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சீனாவின் டீப்சீக் ஏஐ உலக அளவில் இன்றைக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையைத் துவங்கிவிட்டார்கள். ஆனால், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். இந்தியாவினுடைய பெருமை மிகுந்த கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி-யின் இயக்குநர், தான் தினமும் கோமூத்திரம் (கோமியம்) குடிப்பதாகவும் , அதற்கு மருத்துவக் குணம் இருப்பதாகவும் சொல்கிறார்.

போலி மருத்துவத்தை, போலி அறிவியலை பரப்புகிற வேலையைச் செய்கிறார்கள். ஒரே தேசம் ஒரே வரிவிதிப்புக் கொள்கையைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஒரு சதவீத மக்களிடம் 40 சதவீத வருமானம் சென்று சேருகிறது. அந்த ஒரு சதவீத மக்களுக்கு போதுமான வரியை விதித்தால், மீதமுள்ள 99 சதமானோருக்கு வரி செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள் என்பதற்கு அது உதாரணம். ஒரே வரிக் கொள்கை எங்கே இருக்கிறது ?

ஒரு பாப்கானுக்கு மூன்று விதமான வரியை விதிக்கிறீர்கள். பொட்டலம் கட்டாத பாப்கானுக்கு 5% வரி. அட்டைப் பெட்டியிலே இருக்கிற பாப்கானுக்கு 12% வரி. இனிப்பு தடவிய பாப்கானுக்கு 18% வரி. மத்திய அரசு தமிழகத்தின் தேவையை மறுக்கிற அரசாக , தமிழகத்தின் உரிமையை மறுக்கிற அரசாக , தமிழகத்தின் பெருமையை மறுக்கிற அரசாக இருக்கிறது. 1000 கிலோமீட்டர் பயணப்பாதையை மெட்ரோ ரயில் மூலம் உருவாக்கி இருக்கிறோம்.

உலகின் மூன்றாவது பெரிய நாடு என்று இந்த அரசு பெருமையோடு சொல்கிறது. நான் கேட்கிறேன் , இந்த ஆயிரம் கிலோமீட்டரில் தமிழகத்தில் இயங்குகிற மெட்ரோவின் அளவு எவ்வளவு தெரியுமா? உத்தரப் பிரதேசத்தில் 5 நகரங்களில் மெட்ரோ இயங்குகிறது. மகராஷ்டிராவில் 4 நகரங்களில் மெட் ரோ இயங்குகிறது. குஜராத்தில் 2 நகரங்களில் மெட்ரோ இயங்குகிறது. மத்தியப் பிரதேசத்தில் 2 நகரங்களில் மெட் ரோ இயங்குகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு நகரத்தில் மட்டும் தான் 54 கிலோமீட்டர் மட்டும் தான் மெட் ரோ இயங்குகிறது.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மிக கம்பீரமாகச் சொன்னதைப் போன்று இந்தியாவின் வரலாற்றில் வசீகரமான ஒன்று இரும்புத் தொழில்நுட்பம் .டெல்லியில் உள்ள குதுப்மினார் ஒரு துருப்பிடிக்காத இரும்புத்தூண். கோணார்க் கோயிலிலே இருக்கிற இரும்பு மாடம், தார் இரும்பு தூண். இவையெல்லாம் உலக வரலாற்றில் இந்தியாவின் மீதான வசீகரத்துக்கு காரணம். தமிழக முதல்வரால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது ‘5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்புத் தொழில்நுட்பம் இருந்தது’ என்பது உலக வரலாற்றின் ஒரு மிக முக்கியமான செய்தி.

விந்திய மலைக்கு வடக்கே செம்பு மட்டும் தான் பயன்பாட்டில் இருந்தது என சொல்லப்பட்ட காலத்தில் விந்திய மலைக்கு தெற்கே குறிப்பாகத் தமிழகத்தில் இரும்புப் பயன்பாடு வந்துவிட்டது. இயற்கையைப் பகுத்தறிவு கொண்டு அணுகி தங்கள் வாழ்க்கையையும் , வளத்தையும் உருவாக்கிய ஒரு அறிவுச் சமூகமாக தமிழகத்தின் அறிவு மரபு இருந்திருக்கிறது என்பது மிக முக்கியமானது. வருகின்ற 15-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் ராமாயணத்தினுடைய அனிமேசன் படம் திரையிடப்படும் என்று மக்களவைச் செயலகம் சொல்லி இருக்கிறது.

ஆனால் அதற்கு முன்பு 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்புத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததைப் பற்றி தமிழக அரசு வெளியிட்டிருக்கிற ஆவணப்படத்தை இந்த அவையிலே நீங்கள் திரையிட வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இன்று மாநில உரிமையைத் தொடர்ந்து கேள்விக்குறி ஆக்குபவர்களாக ஆளுநர்கள் இருக்கிறார்கள். குறுநில மன்னர்களாகவே தங்களை அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

நீதிமன்றங்கள் எத்தனையோ முறை தலையில் கொட்டினாலும் அவர்கள் மாறுவதாக இல்லை. அரசர்களின் ஆடையை அணிந்து கொள்வதால் மட்டுமே ஒருவர் அரசராகி விட முடியாது. அவர் நாடகக் கலைஞராக மட்டும் தான் ஆக முடியும். இந்த உண்மையை அவருக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. அதேபோல சட்டமன்றத்தில் இருந்து அதிகமாக வெளிநடப்பு செய்கிறவர்களாக ஆளுநர்கள் இருக்கிறார்கள்.

சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெளியே போனால் தான் வெளிநடப்பு. இந்த அவையிலே தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் வெளியேறினால் தான் அது வெளிநடப்பு . இந்த அவைக்கு வருகிறவர்கள் எல்லாம் வெளியேறினால் அதற்குப் பெயர் வெளிநடப்பு அல்ல. தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைக்கும் அறியாமையை எப்படிப் போக்குவது என்று தமிழக மக்களுக்குத் தெரியவில்லை.

இந்த அவையிலே இதை நான் மீண்டும் இங்கே குறிப்பிட வேண்டுமென்று நினைக்கிறேன். இன்றைக்கு அரசியல் சாசனத்தினுடைய 75-வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இணைத்து நடத்தப்பட்ட கூட்டுக் கூட்டத்தில் உறுதிமொழி எடுக்கிற நிகழ்வில், குடியரசுத் தலைவர் அரசியல் சாசனத்தினுடைய முகப்புரையைப் படிக்கிற போது ஆங்கிலத்தில் படிக்கப் போகிறார் என்று நாங்கள் எல்லாம் காத்திருந்தோம்.

ஆனால் குடியரசுத் தலைவர் இந்தியில் இந்த நாட்டினுடைய அரசியல் சாசன முகப்புரையை வாசித்தார். இந்தி தெரியாத பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அப்படியே திகைத்துப் போய் நின்றோம். இது இந்தியாவினுடைய ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால். ஒரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ் இந்த அரங்கத்தை நீங்கள் கொண்டு வர நினைத்தால் இந்தியாவின் பெரும்பான்மையான இந்திய மொழிகளினுடைய பிரதிநிதிகள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்,” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.