புதுடெல்லி: மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், ‘கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஒரு பெரிய சம்பவம் அல்ல, அது மிகைப்படுத்தப்பட்டுள்ளது’ என நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 28-ம் தேதி மவுனி அமாவாசையன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் 30 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 60 பேர் காயமடைந்தனர் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பாஜக எம்.பி ஹேம மாலினி பேசும்போது, “நாங்கள் கும்பமேளாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு நன்றாக நீராடினோம். மாநில அரசால் அனைத்தும் நன்றாக நிர்வகிக்கப்பட்டிருந்தது. கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஒரு பெரிய சம்பவம் அல்ல, அது எவ்வளவு ‘பெரிய சம்பவம்’ என்று எனக்குத் தெரியவில்லை. அது மிகைப்படுத்தப்பட்டுள்ளது. கும்பமேளாவுக்கு அதிகப்படியான மக்கள் வந்திருந்தனர். அதை நிர்வகிப்பது மிகவும் கடினம். மாநில அரசு, தங்களால் முடிந்த அளவுக்கு ஏற்பாடுகளை செய்திருந்தது” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் மறைப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, “அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள்… தவறான விஷயங்களைச் சொல்வதுதான் அவர்களின் வேலை” என்று கூறினார்.
கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மறைத்து வருவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிகழ்வு, சுதந்திர இந்தியாவில் நடந்த மிக மோசமான துயரங்களில் ஒன்று என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் திங்களன்று நாடாளுமன்றத்தில் உயிரிழந்தவர்களின் பட்டியலைக் கோரி இந்தப் பிரச்சினையை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.