கோவை: மக்கள் நலனுக்காக பழநிக்கு யாத்திரை செல்கிறார் வானதி சீனிவாசன். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு யாத்திரை செல்ல விரதம் இருந்து மாலையை அணிந்து கொண்டார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், யாத்திரை செல்வதற்காக விரதம் இருந்து கோவை காந்திபார்க் அருகே அமைந்துள்ள முருகன் கோயிலில் இன்று மாலையிட்டுக் கொண்டார்.
வரும் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருந்து தன்னுடைய யாத்திரையை தொடங்குகிறார். ஆதீனம் முத்து சிவராம சுவாமி அடிகளார் மற்றும் தத்துவ ஞான சபை ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்த ஆச்சார்யா ஆகியோர் யாத்திரையை தொடங்கி வைக்கின்றனர். இதுகுறித்து அவர் கூறும்போது, மக்கள் நலன் வேண்டி மேற்கொள்ளும் இந்த யாத்திரை நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றார்.