மணிப்பூரில் குகி பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் போதை செடிகளை அழிக்கச் சென்ற போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மணிப்பூரில் 90 சதவீதம் மலைப்பகுதிகள், 10 சதவீதம் பள்ளத்தாக்கு பகுதிகள் ஆகும். அந்த மாநிலத்தில் குகி பழங்குடியின மக்கள் மலைப் பகுதிகளிலும் மைதேயி சமுதாய மக்கள் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
மணிப்பூர் மலைப்பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் ‘ஓபியம் பாப்பி’ என்ற செடிகள் வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த செடிகளில் இருந்து ஹெராயின் போதை பொருள் தயாரிக்கப்படுகிறது. மணிப்பூரில் சாகுபடி செய்யப்படும் ‘ஓபியம் பாப்பி’ செடிகள் மியான்மர் வழியாக உலகம் முழுவதும் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் போதை பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது.
இதை தடுக்க மணிப்பூர் மாநில அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மணிப்பூர் போலீஸார், சிஆர்பிஎப் படை வீரர்கள் இணைந்து குகி பழங்குடியினர் வசிக்கும் காங்போக்பி மலைப்பகுதியில் கடந்த 31-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது குகி சமுதாய தலைவர் அஜாங் கோங்சாய்க்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தில் ‘ஓபியம் பாப்பி’ செடிகள் பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை அழிக்க போலீஸார் முயன்றபோது ஒரு கும்பல் போலீஸார் மீது திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் மாவட்ட எஸ்பி மனோஜ் பிரபாகர் உட்பட ஏராளமான போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. போலீஸாரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு, தாக்குதல் நடத்திய கும்பல் அடித்து விரட்டப்பட்டது. பின்னர் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ‘ஓபியம் பாப்பி’ செடிகளை போலீஸார் அழித்தனர். இதேபோல மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் ‘ஓபியம் பாப்பி’ செடிகளை அழிக்கும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும் என்று முதல்வர் பிரேன் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.