மதுரையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அண்ணா நினைவு பேரணிக்கு அனுமதி வழங்கிய எப்படி? – கோர்ட் கேள்வி

மதுரையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அண்ணா நினைவு நாள் பேரணிக்கு அனுமதி வழங்கியது எப்படி? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து முன்னணி சார்பில் 16 கால் மண்டபம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊர்வலம் நடத்த 144 தடையாணை பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆட்சியரின் 144 தடை உத்தரவை ரத்து செய்து இந்து முன்னணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் கலாநிதிமாறன் உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க ஆட்சேபம் தெரிவித்தும் மனுத் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. கால்நடைகளை பலியிடுவது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசுத் தரப்பில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இதுவரை 13 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆடுகள், கோழிகள் பலியிட்டு பரிமாற முயன்றதாக 200 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், இது போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உரிய இடத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதை தடுக்க முடியாது. வேறு இடத்தில் குறிப்பிட்ட நேரம் இன்றே(நேற்று) கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த அனுமதி வழங்கலாம். அதற்கான இடத்தை அரசு தேர்வு செய்து தெரிவிக்க வேண்டும் என்றனர்.

அரசு தரப்பில், திருப்பரங்குன்றம் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கனான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கினால் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இன்று (நேற்று) கூட பக்தர்கள் போல் கோயிலுக்கு சென்றவர்கள் ஆட்சேபகரமான முழுக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் திருவிழா முடிந்து பிப். 19 அல்லது 20 தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், ‘கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்துகிறோம். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமானவர்கள் மதுரைக்கு வந்துள்ளனர். இதனால் இன்றே (நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றனர். நீதிபதிகள், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கினால் எத்தனை பேர் கலந்துகொள்வர் என கேட்டனர்.

அதற்கு மனுதாரர் தரப்பில், அதிகபட்சம் 1500 பேர் வரை கலந்து கொள்வார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்குவதுடன் ஆர்ப்பாட்டத்துக்கு வருவார்கள் எனக் கருதி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றனர்.

அரசுத் தரப்பில், தமுக்கம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

தொடர்ந்து அரசுத் தரப்பில், மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இரவு 12 மணி வரை அமலில் இருப்பதால் தமுக்கம் மைதான வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், திருப்பரங்குன்றம் சம்பவத்துக்காக மட்டும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சரியல்ல. 144 தடை அமலில் இருக்கிறது என்றால் அண்ணா நினைவு நாள் ஊர்வலத்துக்கும், பால்குட ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்கியது எப்படி? எனக் கேள்வி எழுப்பினர்.

அரசு தரப்பில், மறைந்த முதல்வர் அண்ணாவில் நினைவு நாளை ஒட்டி ஊர்வலம் நடத்தப்பட்டது. மத ரீதியான பிரச்சினையை தடுக்கும் விதமாகவோ தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க ஆட்சேபனை தெரிவித்து மனுதாக்கல் செய்தவர்கள் தரப்பில், திருப்பரங்குன்றம் மலையில் தர்கா காலம் காலமாக உள்ளது. அதற்கான ஆவணங்கள் உள்ளன. அங்கு காலம் காலமாக அசைவ உணவு சாப்பிட்டுள்ளனர். தற்போது ஒட்டு மொத்த மலையும் இந்துக்களுக்கு சொந்தமானது என்று கூறுவது சட்டவிரோதம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பழங்காநந்தத்தில் மாலை 5 முதல் 6 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என மாநகர் மாவட்ட காவல் ஆணையர் தரப்பில் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமையில் ஒன்றாகும். அது அரசியலமைப்பிற்கு உட்பட்டும், பொது அமைதிக்கு பிரச்சனை ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும். மேலும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய மனு கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, பழங்காநத்தத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தில் ஒரு ஒலிபெருக்கியை பயன்படுத்தலாம். தேவையற்ற, ஆட்சேபகரமான, வெறுப்பை தூண்டும் முழக்கங்களை எழுப்பக்கூடாது. ஆர்ப்பாட்டம் முழுவதுமாக வீடியோபதிவு செய்யப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.