புதுடெல்லி: தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை மத்திய அரசு கையாளும் விதம் குறித்தும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். சீனர்கள் நமது எல்லைக்குள் இருப்பதாக ராணுவத் தளபதி கூறுகிறார் என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் சீனாவின் பாரம்பரிய ரோந்துப் பணியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை மட்டுமே ராணுவத் தளபதி கூறியிருந்தார். சமீபத்திய பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த நடைமுறைகள் அவற்றின் பாரம்பரிய முறைக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்த விவரத்தையே நாடாளுமன்றத்தில் அரசு பகிர்ந்து கொண்டது. தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் பொறுப்பற்ற அரசியல் செய்கிறார்.
சீனா நுழைந்த இந்தியப் பகுதி ஏதேனும் இருந்தால், அது 1962-ம் ஆண்டு மோதலின் விளைவாக அக்சாய் சின்னில் 38,000 சதுர கி.மீ. மற்றும் 1963-ல் பாகிஸ்தானால் சீனாவுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட 5,180 சதுர கி.மீ. நிலப் பகுதியாக இருக்கும். நமது வரலாற்றின் இந்தக் கட்டம் பற்றி ராகுல் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.