வக்பு மசோதாவால் ஏழை முஸ்லிம்களும், விதவைகளும் பயனடைவார்கள்: ஜேபிசி தலைவர் ஜகதாம்பிகா பால்

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா, சட்டமாகும்போது ஏழை முஸ்லிம்களும், விதவைகளும் பயனடைவார்கள் என்று வக்பு திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார்.

வக்பு மசோதாவுக்கு எதிராக அசாதுதின் ஒவைசி மக்களவையில் நேற்று (திங்கள்) பேசிய நிலையில், அவருக்கு பதில் அளிக்கும் விதமாக ஜகதாம்பிகா பால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்வது தொடர்பான விவாதத்தின்போது பேசிய ​​மெஹபூபா முப்தி, சட்டம் ரத்து செய்யப்பட்டால் ரத்த ஆறு ஓடும் என்று கூறியிருந்தார். ஆனால், அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் பலனடைந்துள்ளது.

அதேபோல், முத்தலாக் முறையை தடை செய்வதற்கான மசோதாவின்போதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த சட்டத்தாலும் முஸ்லிம்கள் பலனடைந்து வருகின்றனர். அதேபோல், புதிய வக்பு மசோதா, சட்டமாகும்போது, ​​அது நன்மைகளைக் கொண்டு வரும்.

வக்பு திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (JPC) ஒரு பகுதியாக ஒவைசி இருந்து வருகிறார். ஆய்வுக் கூட்டங்களில் அவர் பங்கேற்றார். திருத்தங்கள் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. எதிர் கருத்துக்களும் குறிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. வக்பு சொத்துக்களின் நன்மைகள் ஏழை முஸ்லிம்கள், பாஸ்மாண்டக்கள், விதவைகளைச் சென்றடைவதையும் உறுதி செய்ய அரசாங்கம் விரும்புகிறது” என்று தெரிவித்தார்.

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக மக்களவையில் நேற்று பேசிய அசாதுதீன் ஒவைசி, “இந்த அரசாங்கத்தை நான் எச்சரிக்கிறேன். தற்போதைய வடிவத்தில் வக்பு சட்டத்தைக் கொண்டு வந்தால், அது அரசியல் சாசனத்தின் பிரிவு 25, 26 மற்றும் 14 ஐ மீறுவதாக இருக்கும். அது இந்த நாட்டில் சமூக உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.

நீங்கள் இந்தியாவை ‘வளர்ச்சி அடைந்த பாரதமாக’ ஆக்க விரும்புகிறீர்கள். எங்களுக்கு ‘வளர்ச்சி அடைந்த பாரதம்’ வேண்டும். ஆனால், நீங்கள் இந்த நாட்டை 80கள் மற்றும் 90களின் முற்பகுதிக்கு கொண்டு செல்ல விரும்புகிறீர்கள். நாடு அவ்வாறு சென்றால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.

ஒரு பெருமைமிக்க இந்திய முஸ்லிமாக, நான் என் மசூதியின் ஒரு அங்குலத்தைக்கூட இழக்க மாட்டேன். என் தர்காவின் ஒரு அங்குலத்தைக்கூட நான் இழக்க மாட்டேன். நான் அதை அனுமதிக்க மாட்டேன். நாங்கள் இனி இங்கு வந்து ராஜதந்திர உரை நிகழ்த்த மாட்டோம். நான் நின்று நேர்மையாகப் பேச வேண்டிய சபை இது. முஸ்லிம்களாகிய நாங்கள் பெருமைமிக்க இந்தியர்கள். இது எனது சொத்து. இது யாராலும் கொடுக்கப்படவில்லை. அதை எங்களிடமிருந்து நீங்கள் பறிக்க முடியாது. வக்பு என்பது எனக்கு ஒரு வழிபாட்டு முறையாகும்.” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.