America: “ட்ரம்பா – எலான் மஸ்கா" அமெரிக்காவின் அதிபர் யார்? – விமர்சனங்களும் பின்னணியும்!

உலகளவில் கவனிக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று அமெரிக்க அதிபர் தேர்தல். ஆரம்பத்தில் ஜோ பைடனா – டொனால்ட் ட்ரம்ப்பா என்றுத் தொடங்கிய தேர்தல் களம், ஜோ பைடனிடமிருந்து கமலா ஹாரிஸுக்கு கைமாறியது. தேர்தலுக்கு முன்பிருந்தே டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக தெரிவித்துவந்த டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், தேர்தல் களத்தில் முழுவதும் டொனால்ட் ட்ரம்புடன் ஐக்கியமானார். அதிபர் தேர்தலில் எலான் மஸ்கின் ‘எக்ஸ்’ சமூக வலைதளமும் முக்கியப் பங்கு வகித்ததை யாராலும் மறுக்க முடியாது.

எலான் மஸ்க், ட்ரம்ப்

இந்தக் காலகட்டத்தில் ‘எக்ஸ்’ தளம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக பயன்பாட்டை கண்டது. டொனால்டு ட்ரம்ப்புக்கு தனது வெளிப்படையான ஆதரவை அறிவித்த மஸ்க், அதோடு நின்றுவிடாமல் மிகத் தீவிரமாக எக்ஸ் தளத்தில் ஆன்லைன் பிரசாரம் செய்தும் வந்தார். அத்துடன் தன் பங்காக 120 மில்லியன் டாலர்களையும் குடியரசு கட்சியின் பிரசாரத்துக்காக வழங்கினார். இந்த தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது டொனால்டு ட்ரம்ப் தான் என்றாலும், உண்மையில் வெற்றி பெற்றது எலான் மஸ்க்.

அதிபராக வெற்றிப் பெற்ற டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பான வெற்றி உரையின்போது, “எங்களிடம் ஒரு புதிய நட்சத்திரம் இருக்கிறது, அந்த நட்சத்திரம் எலான். அவர் அற்புதமான நபர். நெருங்கிய நண்பர்” எனக் குறிப்பிட்டிருந்தார். டொனால்ட் ட்ரம்புக்கு வாழ்த்து சொல்லும் விதமாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, முதல் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை வரை ட்ரம்பிடம் தொலைபேசியில் பேசியபோதெல்லாம் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும் இணைப்பில் இருந்ததாக வெளியான தகவல்கள் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும். எலான் மஸ்குக்கு ட்ரம்பின் நன்றிக்கடனாக, அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகள், வீண் செலவுகளைக் குறைப்பதற்குமான துறையான அமெரிக்க அரசு திறன்துறையின் (DOGE) தலைவராக எலான் மஸ்க்கை நியமித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்க அரசு திறன்துறையின் (DOGE) தலைவராகப் பொறுப்பேற்ற எலான் மஸ்க், சிறப்பாக செயல்பட்டு வருகிறார் எனப் புகழ்ந்து வருகிறது வெள்ளை மாளிகை. அதே நேரம், ‘அமெரிக்க அரசின் அதிகாரத்தின் மீது தனது கட்டுப்பாட்டை எலான் மஸ்க் அசாதாரண வேகத்தில் இறுக்கி வருகிறார்’ என ஜனநாயகக் கட்சியினரும் அரசியலமைப்பு அறிஞர்களும் எச்சரித்து வருகின்றனர்.

எலான் மஸ்க்

அப்படி என்னதான் செய்கிறார் எலான் மஸ்க்:

எலான் மஸ்க் தலைமையிலான அரசு திறன்துறையின் (DOGE) குழு, லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான ஆலோசனையை வழங்கியிருக்கிறது. அமெரிக்காவின் பாதுக்காக்கப்பட வேண்டிய லட்சக்கணக்கான வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசியமான வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுகியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ‘எலான் மஸ்கின் அதிகாரங்கள் வரம்பற்றதாக தோன்றுகிறது” எனக் குற்றம்சாட்டும் அளவு அவரின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) கோப்புகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் அறைக்குள், எலான் மஸ்க்கின் உதவியாளர்கள் நுழைய அனுமதிக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு ரகசியத் தகவல் வைக்கப்பட்டிருப்பதால், அனுமதி மறுக்கப்படுகிறது. அதன்பிறகு அனுமதி மறுத்த அந்த அதிகாரி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்.

இதற்கிடையில், `ஊழலும் வீண்விரயமும் ஒரே நேரத்தில் வேரூன்றி வருகின்றன’ என கடந்த ஞாயிற்றுக் கிழமை எக்ஸ் பக்கத்தில் பதிவிடுகிறார் எலான் மஸ்க். அதற்கு அடுத்த நாள், அதாவது, திங்கள் கிழமை, எலான் மஸ்க்கால் ‘குற்றவியல் அமைப்பு’ என விமர்சிக்கப்பட்ட சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) தற்காலிக இயக்குநராக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பொறுப்பேற்றார்.

டொனால்ட் ட்ரம்ப்

அப்போதே, தன் எக்ஸ் பக்கத்தில் “சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்” எனத் தனிப்பட்ட முறையில் அறிவிக்கிறார். அதற்கு அடுத்த சிலமணி நேரத்தில், மத்திய அரசின் நிதிப் பரிமாற்றத்தை நிர்வகிக்கும் அமெரிக்கக் கருவூலத்தின் கொடுப்பனவு முறையைக் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார்.

மேலும், கருவூலத் துறையில் முக்கியமான கட்டண முறைகளை அணுகுவது தொடர்பாக, கருவூலத்துறையின் உயர் அதிகாரி, டேவிட் ஏ. லெப்ரிக்கும், எலான் மஸ்க் குழுவுக்கும் கருத்துமுரண் ஏற்பட்டிருக்கிறது. அதனால் டேவிட் ஏ. லெப்ரி தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஆனால் எலான் மஸ்க் தன் எக்ஸ் பக்கத்தில், “வரி செலுத்துவோர் பணத்தை மோசடி செய்வதையும் வீணாக்குவதையும் நிறுத்துவதற்கான ஒரே வழி, பணம் செலுத்துவோரின் சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகளை நிறுத்துவதுதான்.” என தன் நிலைப்பாட்டில் பிடிவாதமாக நின்றார்.

ராக்கெட் ஏவுதலை மேற்பார்வையிடும் FAA (Federal Aviation Administration) நிறுவனத்தை எலான் மஸ்க் விமர்சித்ததால், அதன் தலைவர் பதவி விலகினார். அடுத்த சிலநாள்களில், ராணுவ ஹெலிகாப்டரும், பயணிகள் விமானமும் மோதி பெரும் விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்பட்டது. அதன்பிறகு அவசர அவசரமாக டொனால்ட் ட்ரம்ப் FAA-க்கு புதிய தலைவரை நியமிக்கிறார்.

இதுபோன்ற சூழல்களில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்றே தெரியாத அளவு எலான் மஸ்க் அதிகாரத்தை தன்வசப்படுத்துகிறார் என்றக் குற்றச்சாட்டு தீவிரமாகி வருகிறது.

எலான் மஸ்க் – டொனால்ட் ட்ரம்ப்

முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நிர்வாகத்தில் தலைமை நெறிமுறை வழக்கறிஞராகப் பணியாற்றிய ரிச்சர்ட் பெயிண்டர், “அதிபரும், அமைச்சரவை உறுப்பினர்களும் கருவூலச் செயலாளருக்கு எப்போதும் உறுதுணையாகவே இருந்திருக்கிறார்கள். இப்போது நடக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை நான் எப்போதும் பார்த்ததில்லை” எனக் குறிப்பிடுகிறார். அரசு ஊழியர்களின் பணி நீக்கம், அதிரடியாகப் பறிக்கப்படும் அதிகாரங்கள், போன்றக் குற்றச்சாட்டுகள் எலான் மஸ்க் மீது தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

“DOGE-ன் கருவூலத்தின் பணம் செலுத்தும் முறைக்கான புதிய அணுகல்கள் மூலம், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் தனியுரிமை சட்டவிரோதமாக சமரசம் செய்யப்படும்’ எனக் குற்றம்சாட்டி இந்த விவகாரம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எலான் மஸ்க் மீதும், கருவூலத் துறை மற்றும் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் மீதும் வழக்குப் பதிவுசெய்திருக்கிறது.

“நீதித் துறையால் மட்டுமே இந்த சிக்கலை முடிவுக்கு கொண்டுவர முடியும்” என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரும், அரசு நெறிமுறைகளில் நிபுணத்துவம் பெற்றவருமான கேத்லீன் கிளார்க் தெரிவித்திருக்கிறார்.

டொனால்ட் ட்ரம்ப்

இதுபோன்று தொடர் சிக்கல்களை சந்தித்து வரும் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசின் பத்திரிக்கைச் செயலாளர் கரோலின் லீவிட்டின், “எலான் மஸ்க் DOGE-ஐ ஒரு சிறப்பு அரசு ஊழியராகவே வழிநடத்துகிறார். இது ஒரு தற்காலிக நியமனம்தான். இப்படி ஒரு நபரை வருடத்திற்கு 130 நாள்களுக்கு வரையறுக்கப்பட்ட சேவைகளைச் செய்ய அனுமதிக்க முடியும். அதன் அடிப்படையில்தான் இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.” என விளக்கமளிக்கிறார்.

இந்த சர்ச்சைகள் தொடர்பாகப் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “வெள்ளை மாளிகையின் வெளிப்படையான ஒப்புதல் இருந்தால் மட்டுமே எலான் மஸ்க்கால் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியும். எனவே பிரச்னை இருப்பதாக நாங்கள் நினைக்கும் சூழல்களில், எலான் மஸ்க்கை அதன் அருகில்கூட செல்ல விடமாட்டோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், அரசியல் ஆய்வாளர்களும், அரசு அதிகாரிகளும் புதிய அரசுக்கு எதிராக தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.