90-ஸ் கிட்ஸுக்கு `மை டியர் பூதம்’ சீரியல் அவ்வளவு ஃபேவரைட்!
அந்த சீரியலில் மூசாவாக நடித்திருந்த அபிலாஷை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர்தான் `குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் மாணிக்சந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் குறித்தான மீம்ஸ்தான் சமூக வலைதளப் பக்கங்களில் தற்போதைய அதிரடி வைரல். `மை டியர் பூதம்’ சீரியலுக்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டவர் `நாகேஷ் திரையரங்கம்’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். நாஸ்டால்ஜியாவாக ஓர் உரையாடலை நிகழ்த்துவோம் எனத் திட்டமிட்டு அபிலாஷை சந்தித்து ஒரு சாட் போட்டோம்.
நம்மிடையே பேசத் தொடங்கிய அபிலாஷ், “ `குடும்பஸ்தன்’ படத்துல நான் நடிச்சிருந்தது இப்போ வைரல் கன்டென்ட் ஆகிடுச்சு. படம் ரிலீஸானதுக்குப் பிறகு என்னுடைய நண்பர்கள் என்னைப் பற்றி வந்திருந்த மீம்ஸை எனக்கு அனுப்பியிருந்தாங்க. இன்னும் நம்மள மக்கள் நினைவுல வச்சிருக்கிறாங்கிற விஷயம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குது. `குடும்பஸ்தன்’ படத்துல மோத்திலால் ஜுவல்லர்ஸ் வச்சிருக்கும் மாணிக்சந்த் கதாபாத்திரத்துல நான் நடிச்சிருந்தேன். சொல்லப்போனால், நான் இந்தப் படத்துல நடிக்கணும்னு திட்டமிடவே இல்ல. நான் இந்தப் படத்தோட தயாரிப்பு நிறுவனத்துல எக்ஸிக்யூடிவ் ப்ரொடியூசராக வேலை பார்த்துட்டு இருந்தேன்.
அந்த மாணிக்சந்த் கதாபாத்திரத்துக்கு நடிகர்கள் தேடிட்டு இருக்கும்போது நடிகர் பிரசன்னா சார்தான் என்னைப் பார்த்து `நீங்க அந்தக் கதாபாத்திரம் நடிச்சா நல்லாயிருக்கும்’னு சொன்னாரு. அப்போ வரைக்கும் நான்தான் `மை டியர் பூதம்’ மூசானு யாருக்கும் தெரியாது. தயாரிப்பாளரும் `நீங்கதான் நடிச்சிருக்கீங்களே! இந்தப் படத்துல நடிங்க’னு சொன்னாரு. அப்படிதான் நான் `குடும்பஸ்தன்’ படத்துக்குள்ள வந்தேன். ஷூட்டிங் நடக்கும்போது நான்தான் அந்த மூசா கதாபாத்திரத்துல நடிச்சிருந்தவர்னு எல்லோரும் அடையாளப்படுத்தினாங்க.
மணிகண்டன் சாருமே என்னை அடையாளப்படுத்திப் பேசினாரு. அவரைப் பற்றி சொல்லியே ஆகணும்… ரொம்பவே பணிவான மனிதர் அவர். படப்பிடிப்பு தளத்துல ரொம்ப உறுதுணையோடு இருப்பாரு. இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை பிரசன்னா சார் என்கிட்ட சொல்லவே இல்ல. என்னுடைய முகம் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்திப் போகும்னுதான் படக்குழுவுல இருந்து என்னை நடிக்க வைக்க யோசிச்சிருக்காங்க.” என்றவர், “நான் படிப்புக்காகதான் நடிப்புல இருந்து இடைவெளி எடுத்துக்கிட்டேன்.
மீண்டும் நடிக்கிறதுக்கு வந்ததுக்குப் பிறகு ஆரி சார் நடிச்சிருந்த `நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படத்துல வில்லன் கதாபாத்திரத்துல நடிச்சிருந்தேன். பிறகு, `தோனி கபடிக் குழு’ என்கிற திரைப்படத்துல முதன்மை கதாபாத்திரத்துல நடிச்சிருந்தேன். இதுக்கெல்லாம் அப்புறம் ஒரு படத்துல நான் நடிக்கிறதுக்கு கமிட்டானேன். அப்போ ஒருவர் `இவனுக்கு என்ன மார்கெட் இருக்கு. இவனை வச்சு படம் பண்றீங்க’னு தயாரிப்பாளர்கிட்ட சொன்னாரு. அந்த படமும் அதுக்கப்புறம் டேக் ஆஃப் ஆகல. அந்த மார்கெட்ங்கிற வார்த்தை என்னைப் போட்டு உறுத்துச்சு. அந்த மார்க்கெட் பற்றி கத்துக்கணும்னுதான் புரொடக்ஷன் பக்கம் வந்தேன். இப்போ பயணம் அப்படியே போயிட்டு இருக்கு…..” என்றார்.
“ `மை டியர் பூதம்’ மூசாவாக நீங்க எங்களுக்கு அவ்வளவு பரிச்சயம். அந்த வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது எப்படி?” எனக் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், “ எனக்கு நடிப்பு மேல ஆர்வம் இருந்தது. அப்போ நாங்க குடும்பத்தோட திருச்சில இருந்தோம். வார இறுதி நாட்கள்ல ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டு சென்னைக்கு வந்து நானும் என் அப்பாவும் வாய்ப்பு தேடுவோம். ஏ.வி.எம் ஸ்டுடியோஸ், விஜய வாஹினி ஸ்டுடியோஸ் போன்ற இடங்களுக்குப் போய் வாய்ப்பு கேட்டிருக்கோம். அங்க இருக்கிற வாட்ச்மேன் எங்களை துரத்தியெல்லாம் இருக்காங்க. அப்படியான தேடல்ல எங்க அப்பாவினுடைய ஒரு நண்பர் மூலமாகதான் எனக்கு `மை டியர் பூதம்’ வாய்ப்புக் கிடைச்சது.
அந்த மூசா கதாபாத்திரம்தான் எனக்கு இன்னைக்கு வரைக்கும் அடையாளமாக இருக்கு. ஷூட்டிங்ல ஒரு நாள் என்னை தேடி ஸ்கூல் படிக்கிற குழந்தைகள் வந்துட்டாங்க. அதுனால படப்பிடிப்புலாம் நிறுத்தியிருக்கோம். அதே மாதிரி இன்னொரு தருணமும் இருக்கு. அந்த தருணம் என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமானது. வெளிநாட்டுல இருந்து ஒரு அம்மா என்னைத் தொடர்ந்து சீரியல்ல பார்த்திருக்காங்க.
அவங்களோட மகன் எதிர்பாராத விதமாக முன்பே இறந்துவிட்டார். நான் அவங்க மகனைப் போலவே இருக்கேன்னு என் பெற்றோர்கிட்ட என்னை தத்தெடுத்துக்கிறேன்னு சொன்னாங்க. இப்படியான அளவுக்கு எமோஷனலாகவும் மக்களுக்கு நான் பரிச்சயமாகியிருக்கேன். லைம் லைட்டை மிஸ் பண்ணிட்டேன்னு வருத்தம் இருக்குதான். ஆனால், அந்த நேரத்துல கல்வி எனக்கு ரொம்பவே முக்கியமாக இருந்துச்சு. அந்த தருணத்தில நான் ஸ்கூலுக்கு மாசத்துல மொத்தமாகவே 5,6 நாட்கள்தான் போவேன். என்னுடைய நண்பர்கள்கூட `நீ மேஜிக் பண்ணி பாஸ் பண்ணிடுவ’னு கிண்டலாம் பண்ணுவாங்க.
அப்போ ரொம்பவே பிஸியாக ஷூட்டிங்லதான் சுத்திட்டு இருப்பேன். அந்த சமயத்துல எனக்குப் பட வாய்ப்புகளும் வந்துச்சு. பார்த்திபன் சார் இயக்கத்துல ஒரு திரைப்படத்துல நடிக்க வேண்டியது. விஷ்ணுவர்தன் சார் டைரக்ஷன்ல நடிக்க வேண்டியது. பிறகு, கே.எஸ். ரவிக்குமார் சாரோட `வரலாறு’ திரைப்படத்துலயும் நான் நடிக்க வேண்டியது. இந்தப் படங்களெல்லாம் நான் அப்போ மிஸ் பண்ணிட்டேன். இப்போ `குடும்பஸ்தன்’ மூலமாக மற்றுமொரு அடையாளம் கிடைச்சிருக்கு. இப்போ அடுத்து ரெண்டு படங்கள் நடிக்கவிருக்கேன். அவையெல்லாம் `குடும்பஸ்தன்’ ரிலீஸுக்குப் பிறகு கிடைச்ச வாய்ப்புகள்!” எனப் பேசி முடித்தார்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…