USA: சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பும் அமெரிக்கா… இந்தியாவின் முடிவு என்ன?

தேர்தல் பிரச்சாரத்தின் போது, “வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது” என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதன்படி இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற கையோடு பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார், அவர். இதன்படி பிறநாடுகளிலிருந்து வந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் மக்கள் சொந்த நாடுகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். முதலில் இவ்வாறு குடியேறிய கொலம்பியர்கள்தான் இரண்டு விமானங்களில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆனால், “கொலம்பியா நாட்டவர்களை குற்றவாளிகளைப் போல அமெரிக்க நடத்தக்கூடாது” எனகூறிய அந்நாட்டின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கண்டம் தெரிவித்திருந்தார். மேலும் அவர், அமெரிக்காவின் ராணுவ விமானங்கள் கொலம்பியாவில் தரையிறங்கவும் அனுமதி மறுத்தார்.

அமெரிக்கா

இதில் கடுப்பான ட்ரம்ப், “அமெரிக்க விமானங்களை தரையிறங்க கொலம்பியா அனுமதி மறுத்துவிட்டது. எனவே அந்நாட்டின் மீது வரிகள் விதிக்கப்படும். அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும். ஒரு வாரத்தில் 50% அதிகரிக்கப்படும். கொலம்பியாவின் அரசியல் கட்சி உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அவர்களின் நட்பு நாடுகள், ஆதரவாளர்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கு பயணத் தடை விதிக்கப்படும். மேலும் அவர்களின் விசாவும் உடனடியாக ரத்து செய்யப்படும். இத்துடன் இந்த விவகாரம் முடிந்துவிடாது. இது வெறும் தொடக்கம் மட்டும்தான்” என அறிவித்தார்.

மெக்சிகோ

பதிலுக்கு அந்த நாடு, “அமெரிக்கா மீது 50% வரி விதிக்கப்படும்” என அறிவித்தது. பிறகு அமெரிக்காவின் மிரட்டலுக்கு கொலம்பியா பணிந்தது. கூடவே தங்களது நாட்டவரை திரும்ப பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து வெள்ளை மாளிகை, “அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என கொலம்பியா அரசு தெரிவித்திருக்கிறது. எனவே அந்த நாட்டின் மீது வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு தற்காலிகமாக கைவிடப்படுகிறது. ஒருவேளை கொலம்பியா அரசு தாங்கள் கூறியதை செய்யத் தவறும் பட்சத்தில் கடுமையான வரி விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ட்ரம்ப், “அமெரிக்கா, மெக்சிகோ இடையிலான எல்லையில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தப்படும். மெக்சிகோ எல்லை வழியாக ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைகிறார்கள். அப்படி வருவோரை தடுப்பதற்குத்தான் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. விரைவில் தடுப்புச் சுவர் அமைக்கப்படும்” என அறிவித்தார்.

இதன்படி அந்த நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறுவர்களை கைது செய்து ராணுவ விமானங்களின் மூலம் மீண்டும் மெக்சிகோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தசூழலில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட், “கனடா, மெக்சிகோவுக்கு 25%, சீனாவுக்கு 10% வரியும் விதிக்கப்படவுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக ஃபென்டனயில் போதைப்பொருளை அமெரிக்காவுக்குள் அனுப்புகிறார்கள். இதில் ஏற்பட்ட பாதிப்பினால் கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் இறந்திருக்கிறார்கள். எனவே, இதை தடுக்கும் வகையில்தான் வரிவிதிப்பு நடவடிக்கையை ட்ரம்ப் எடுத்திருக்கிறார்” என்றார்.

ஜீ ஜின்பிங்

இதன்படி, “அமெரிக்காவில் சட்டவிரோதமான குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தேசிய அவசரநிலை முடிவுக்கு வரும் வரை புதிய வரிகள் அமலில் இருக்கும். போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை, எல்லைப் பாதுகாப்பு போன்றவற்றில் அமெரிக்காவுக்கு போதுமான அளவுக்கு ஒத்துழைப்பை கனடா வழங்கவில்லை. எனவே, சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அமெரிக்கா எதிர்பார்க்கும் ஒத்துழைப்புக்களை கனடா கொடுக்கும் வரையில் அந்த நாட்டின் மீதான வரி விதிப்புகள் தொடரும்” என அறிவிக்கப்பட்டது.

முதலில் இதற்கு கனடா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் தனது முடிவிலிருந்து ட்ரம்ப் பின்வாங்கவில்லை.

இதையடுத்து, “எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கனடா அறிவித்தது. இதையடுத்து ட்ரம்ப், “கனடா மீது 25% வரி விதிப்பதாக இருந்த திட்டத்தை 30 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது” என அறிவித்திருக்கிறது. ஆனால், “சீனா மீது விதிக்கப்பட்ட 10% வரி ரத்து செய்யப்படவில்லை. ட்ரம்ப் கோபத்தில் இருப்பதால் அது மேலும் அதிகரிக்கப்படும்” என்கிறது வெள்ளைமாளிகை வட்டாரம்.

இந்தசூழலில்தான் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து செய்தி முகமை ஒன்றிடம் பேசிய பெயர்சொல்ல விரும்பாத அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர், “சி-17 விமானம் ஒன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றுள்ளது. அதில் 205 பேர் இருக்கிறார்கள்.”என தெரிவித்திருக்கிறார். மொத்தமாக அந்த நாட்டில் 18,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியிருப்பதாக அந்தநாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்ரம்ப், “வரலாற்றில் முதல் முறையாக, நாங்கள் சட்டவிரோத வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து ராணுவ விமானங்களில் ஏற்றி, அவர்கள் வந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புகிறோம். இதற்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த விஷயத்தில் மோடி சரியானதைச் செய்வார்” என தெரிவித்திருந்தார்.

முன்னதாக 2023-24 காலகட்டத்தில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை 1,100-க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாடு கடத்தியது. இப்படி 495 விமானங்கள் மூலம் 1,60,000 நபர்களை இந்தியா உள்பட 145 நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

மாதிரி படம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஏன் இந்தியர்கள் குடியேறியிருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு பதிலளித்த விவரப்புள்ளிகள், “அமெரிக்காவில் மிகக் குறைந்த தனிநபர் வருமானம் 48,110 டாலர் ஆகும். இதுவே இந்தியாவின் நிகர தேசிய வருமானம் சுமார் 1,161 டாலர். அதிலும் பீகார் மிகக் குறைந்த தனிநபர் வருமானத்தைக் கொண்டுள்ளது. இங்கு தனிநபர் வருமானம் 708 டாலராக இருக்கிறது. எனவேதான் தங்களின் தங்கள் வாழ்க்கை மேம்படுத்த இந்தியர்கள் அங்கு தங்குகிறார்கள். மேலும் பல இந்தியர்களுக்கு விசாக்கள் அல்லது கிரீன் கார்டுகளைப் பெறுவதில் கட்டுப்பாடுகளையும் நீண்ட தாமதங்களையும் எதிர்கொள்கின்றனர்.

இப்படி சட்டவிரோதமாக தங்கியிருப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மறுபக்கம் H-1B விசாக்களை பெறுவதில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது. கடந்த 30.11.2023 அன்று நிலவரப்படி வழங்கப்பட்ட 265,777 H-1B விசாக்களில் சுமார் 78% இந்தியர்களுக்குக் கிடைத்தன” என்றனர். இருப்பினும் ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. “சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஒன்றும் குற்றவாளிகள் இல்லை. எனவே அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும்” என பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ட்ரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

சசிகாந்த் செந்தில்

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “ஓர் அரசாங்கமாக அமெரிக்காவின் முடிவை ஆதரிக்கிறோம். அமெரிக்காவில் உள்ள சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், “இந்தியாவில் தங்களுக்கு யாரையெல்லாம் பிடிக்கவில்லையோ அவர்களை சட்டவிரோதமாக குடியேறியிருப்பதாக பா.ஜ.க-வினர் கூறுவார்கள். அமெரிக்காவில் பிறநாடுகளை சேர்த்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியிருப்பதாக ட்ரம்ப் சொல்வார். இதுதான் வலதுசாரிகளின் அரசியல். இதன் மூலம் சொந்த நாட்டில் உண்மையிலேயே இருக்கும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதை மறைத்துவிடுவார்கள். இப்படியெல்லாம் செய்து மக்களை பயத்திலேயே வைத்திருப்பார்கள். இந்த விஷயத்தில் மோடி எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார். ட்ரம்ப் செய்வதற்கெல்லாம் ஆதரவுதான் தெரிவிப்பார். இதன்மூலம் மோடி யார் என்பது தெளிவாக தெரிகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.