Van Gogh: ரூ.3,400-க்கு வாங்கிய ஓவியத்தின் மதிப்பு ரூ.130 கோடியா?

வீட்டிலிருந்த பழைய பொருள்களை விற்பனை செய்தவரிடம் குறைந்த விலைக்கு வாங்கிய ஓவியம் ஒன்று தற்போது அதிசயிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

2016-ம் ஆண்டு, பழமையான பொருள்களை சேகரிக்கும் நபர், ஒரு வீட்டிலிருந்து ஐம்பது டாலர்களுக்கு ஓவியம் ஒன்றை வாங்கியுள்ளார். ஐம்பது டாலர்கள் என்பது 2016-ம் ஆண்டு டாலர் பதிப்பு படி, 3,400 ரூபாய்.

அதை வாங்கியபோது, 19-ம் நூற்றாண்டின் உலகப் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் வின்சண்ட் வான்கோவின் தொலைந்துபோன ஓவியமாக இருக்கலாம் என்பதைப் பற்றி அவர் சிந்திக்கக்கூட இல்லை.

Van Gogh

கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து, தற்போது வான்கோவின் (Van Gogh) ஓவியம் என அனுமானிக்கப்படும் அந்த படத்துக்கு எலிமர் (Elimar) எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்போது மொத்த கலை உலகத்தாலும் கூர்ந்து நோக்கப்படும் இது, 15 மில்லியன் டாலர்கள் மதிப்புமிக்கதாக இருக்கலாம் என்கின்றனர். 15 மில்லியன் டாலர்கள் என்பது, சுமார் 130 கோடி ரூபாய்!

எலிமர் ஓவியத்தில் ஒரு வயதான மீனவர் வாயில் புகைக் குழாயுடன் நரைத்த தாடியுடன் காட்சியளிக்கிறார். கடற்கரையில் அவர் தனது வலையை பழுது பார்க்கும் காட்சி வரையப்பட்டுள்ளது.

18 இன்ச் நீளமும் 16.5 இன்ச் அகலமும் கொண்ட இந்த ஓவியம், அடர்த்தியான இம்பாஸ்டோ எண்ணெய்யால் குறிக்கப்பட்டுள்ளது – இது வான்கோவின் தனித்துவமான ஓவியமுறை என்கின்றனர்.

இந்த ஓவியத்தில் எலிமர் என எழுதப்பட்டுள்ளது. இது அந்த மீனவரின் பெயராக இருக்கலாம் என்கின்றனர்.

இந்த ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டதும், LMI Group International என்ற நியுயார்க்கைச் சேர்ந்த நிறுவனத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. அந்த நிறுவனம் தொகையை இறுதி செய்யாமல் அந்த ஓவியத்தை வாங்கி, அதன் நம்பகத்தன்மை குறித்து நான்கு ஆண்டுகால தீவிர விசாரணையைத் தொடங்கியது. வேதியியலாளர்கள், கலை வரலாற்றறிஞர்கள் இந்த ஓவியத்தை சோதித்துள்ளனர்.

Elimar

நிறமிகள் மற்றும் கேன்வாஸ் இழைகளை சோதித்து 450 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையின்படி, அந்த ஓவியத்தில் உள்ள ஒரு நிறமியைத் தவிர மற்றவை அனைத்தும் வான்கோ பயன்படுத்தும் நிறமிகளுடன் ஒத்துப்போயிருக்கிறது.

LMI குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரி மேக்ஸ்வெல் ஆண்டெர்சன், எலிமர் ஓவியம் 1889-ம் ஆண்டு, வான்கோ புனித பவுல் மனநல மருத்துவமனையில் இருந்தபோது வரைந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். இந்த காலத்தில்தான் புகழ்பெற்ற ஸ்டேரி நைட்ஸ், ஐரிஸ் ஓவியங்களை வான்கோ வரைந்தது குறிப்பிடத்தக்கது.

எலிமர் ஓவியம் வான்கோவினுடையது எனக் கூறும் சாட்சியங்கள் இருந்தாலும், ஆம்ஸ்டெர்டாமில் உள்ள வான்கோ மியூசியம் இதனை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த ஓவியம் வான்கோவினுடையது என்று உறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே பெரும் மதிப்பைப் பெறும். கலை உலக ரசிகர்கள் பலரும் இரண்டு தரப்பிலும் வாதங்களை முன்வைக்கின்றனர். சிலர் இது டச்சு ஓவியரான எலிமர் வரைந்ததாக இருக்கலாம் என்கின்றனர். தற்போதைக்கு இந்த ஓவியம் நடுவில் சிக்கியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.